கொரோனா வைரஸை விட, மிக மோசமாக தேர்தல் வைரஸ் உருவெடுத்துள்ளது
(எம்.ஆர்.எம்.வஸீம்)
தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எடுத்திருக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேர்தலை சுகாதார முறையில் நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தலை சுகாதார முறையில் நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் வழிகாட்டியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், தேர்தலில் வாக்காளர்களே வாக்களிக்க வேண்டும்.
அவர்களின் மன நிலைகளை அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளுமே நன்கறிவர். அதனால் கட்சிகளின் கருத்துக்களும் கேட்டறியப்பட வேண்டும்.
அத்துடன் சுகாதாரப்பிரிவினரின் வழிகாட்டல்களில் சிலவற்றை நடைமுறைப்படுத்துவது கடினமானதாக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக்குழுக்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னர் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதாக அவர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மேலும் கொரோனா வைரஸை விட மிகவும் மோசமாக தேர்தல் வைரஸ் உருவெடுத்துள்ளது. ஆளுங்கட்சி ஜூன் 20ஆம் திகதி, எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டுமென பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது.
எனினும், ஆளுங்கட்சிக்காரர்களை விட ஏனைய அனைத்துக் கட்சியினரும், இது தேர்தல் காலம் அல்ல எனவும் மக்களை கொரோனா வைரஸுக்கு காவுகொடுத்து, பலிக்கடாவாக்க முடியாதெனவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.
ஆனால், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில், தேர்தலை நடத்துமாறு அடம்பிடித்து நின்றது. அதற்காக ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், தேர்தல்கள் ஆணைக்குழு மீதும் அதன் உறுப்பினர்கள், குறிப்பாக, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலை கடுமமையாக விமர்சித்து வந்தனர்.
தற்போதும் 19ஆவது திருத்தத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைகுழுவின் சுயாதீனத்தன்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில், தினமும் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஒரு தமிழர் என்பதனாலே இவ்வாறு செயற்படுகின்றனர். அரசாங்கத்தில் இருப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுவொன்றை விமர்சிப்பதை ஏற்றுக்காெள்ள முடியாது. அரசாங்கத்துக்கு தேவையான முறையில் தீர்மானங்களை எடுக்காதமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றார்.
CORONA 19 AI VIDA, REMBA DANGER,
ReplyDeleteASATH CORONA. ATHIL VISHAM
KALANDULLATHU.