வீட்டிலிருந்து தொழில், கல்வி ஈடுபடுவோருக்கு புதிய டேட்டா பக்கேஜ்
(நா.தனுஜா)
கொவிட் - 19 காரணமாக வீட்டிலிருந்து தொழில்புரிவோர் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு புதிய டேட்டா பக்கேஜ் வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த இரண்டரை மாதகாலமாக நாட்டின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்தவாறே பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அதேபோன்று இணையம் மற்றும் நவீன செயலிகள் ஊடாக மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இவற்றுக்கென நவீன தகவல் தொடர்பாடலுக்கான டேட்டா பக்கேஜ் வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது நாட்டின் செயற்பாடுகள் ஒவ்வொரு கட்டமாக மீண்டும் வழமைக்குத் திரும்பிவந்தாலும், இன்னமும் வீட்டிலிருந்தவாறு வேலைசெய்தல் மற்றும் கல்விசெயற்பாடு என்பவற்றுக்கான தேவை காணப்படுகின்றது.
எனவே இதற்குப் பயன்படுத்தப்படும் டேட்டா பக்கேஜ்களுக்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கீழான சேவை வழங்குநர்கள் ஊடாக புதிய டேட்டா பக்கேஜ் வசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
இதனூடாக வீட்டிலிருந்தவாறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் கல்விச்செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் பயனடைய முடியுமென இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. புதிய டேட்டா பக்கேஜ் சேவை வழங்கல் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவின் http://www.trc.gov.lk/ என்ற இணையத்தள முகவரியில் பிரவேசிப்பதனூடாகப் பெற்றுக்கொள்ளமுடியும்.
Post a Comment