கருணா, விமல், கம்மன்பில ஆகியோரின் ஆயுதம் இனவாதமே - முஜிபுர் ரஹுமான்
(செ.தேன்மொழி)
கருணா அம்மான் , விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். தெற்றிகில் சிங்கள மக்கள் முன்னிலையில் இவர்கள் முன்வைத்து வரும் இனவாத அரசியல் செயற்பாடுகளையே கிழக்கில் கருணா தமிழ் மக்கள் முன்னிலையில் செயற்படுத்தி வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிடைத்து விட்டால் ஏகாதிபத்தியவாதத்துடன் செயற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கருணா அம்மானுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தொடர்பில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.
இது ஒரு ஏமாற்று பேச்சாகும். கருணா அம்மான் கடந்த காலங்களிலே யாருடன் இணைந்து செயற்பட்டார் என்பது முழு நாடும் அறிந்ததே. கருணாவுக்கு ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சர் பதிவிகூட வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் , இரு முறை தேசியப்பட்டியலில் சந்தர்ப்பம் கொடுத்ததினால் , இம்முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருவதாக மஹிந்தவுக்கு அறிவித்ததாகவும் கருணாவே கூறியுள்ளார். இவ்வாறான ஒரு நிலையில் பொதுஜன பெரமுனவுக்கும் , கருணாவுக்கும் இடையில் தொடர்பில்லை என்றுக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது.
ஆளும் தரப்பிலிருக்கும் விமல் வீரவன்ச , உதய கம்மன்பில ஈகியோர் தெற்கிள் சிங்கள மக்கள் முன்னிலையில் எவ்வாறு இனவாத அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்களோ? அதனைப் போன்றுதான் கருணாவும் கிழக்கில் தமிழ் மக்கள் முன்னிலையில் இந்த இனவாத அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
இதுவும் அரசாங்கத்தின் அரசியல் இலாபம் கருதிய ஒரு நோக்கமாக இருக்கலாம். கிழக்கில் கருணாவை பயன்படுத்தி வாக்குகளை அதிகரிப்பதுடன் , கருணாவின் கருத்தை காரணங்காட்டி தெற்கிலும் இனவாத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டமாகவும் இது இருக்கலாம். இவர்கள் மூவருமே ஓர் அணியிலேயே செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் போன்றே இவர்களது செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளன என்றார்.
Post a Comment