எனது தந்தை படிக்கட்டுகளில் விழுந்தே, உயிரிழந்தார் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானதாகும் -ஜீவன் தொண்டமான்
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மரணம் குறித்து போலியான தகவல்கள் பரவி வருவதாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்தத் தகவலை வெளியிட்டார்.
ஆறுமுகம் தொண்டமான் படிக்கட்டுகளில் விழுந்தே உயிரிழந்தார் என தகவல்கள் சமூக இணையத்தளங்களில் வெளியாகின்றன. எனினும் இது முற்றிலும் தவறான தகவலாகும்.
இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை நானும் பார்வையுற்றேன். மிகவும் கவலை.. ஏன் இவ்வாறு போலி தகவல்களை பரப்புகின்றனர் என்பது குறித்து. மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அவருக்கு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டது. அந்த ஓரிரு நிமிடங்களிலேயே அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
கடந்த 26ஆம் திகதி ஆறுமுகம் தொண்டமான் உயிரிழந்த நிலையில், நேற்றைய தினம் அவரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
எனினும் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஆறுமுகன் தொண்டமான் போட்டியிட பெயரிடப்பட்டிருந்தார். எனினும் தற்போது ஜீவன் தொண்டமான் அதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தின் போது அரசியல் பிரச்சாரங்களை ஜீவன் தொண்டமான் முன்னெடுப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆறுமுகத்தின் இறுதி ஊர்வலத்தின் போது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக பல்வேறு சுகாதார அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜீவன் தொண்டமான், தந்தையின் பூதவுடலை கொண்டு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நான் வாகனத்தின் மீதேறி மக்களை வழிவிடுமாறு கைக்கூப்பி கேட்டுக்கொண்டேன் அதற்கிணங்க அவர்களும் விலகிச் சென்றனர். அரசியல் இலாபத்திற்காக நான் அவ்வாறு செய்யவில்லை. அதனை நான் எதிர்பார்க்கவும் இல்லை.
நான் இலங்கைக்கு வருகை தந்து 3 வருடங்களுக்கு தந்தைக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு எந்தவித விளம்பரத்தையும் எதிர்பார்க்காமல் சேவையாற்றுகின்றேன். இது அதற்கு சான்றாகும். எனக்கு விளம்பரம் அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் ஆறுமுகம் தொண்டமானின் மரணம் குறித்து சர்ச்சை நிலவுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment