உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையும் - கரு
(நா.தனுஜா)
பாராளுமன்றத்தைக் கலைத்தல் மற்றும் எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துதல் ஆகியவற்றுக்கான வெளியிடப்பட்ட வர்த்தமானிகளை வலுவிழக்கச்செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பது தொடர்பான தீர்ப்பு இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டதுடன், தேர்தலை நடத்துவதற்கான திகதியும் பிற்போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யுமாறுகோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்ற தீர்மானமும் இன்னமும் இழுபறி நிலையிலுள்ளது.
இத்தகையதொரு பின்னணியிலேயே இதுகுறித்த தனது கருத்தை கரு ஜயசூரிய அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
'பாராளுமன்றம் கலைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்திருக்கிறது. அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவு இன்னமும் கேள்விக்குறியான நிலையிலேயே இருக்கிறது' என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் தற்போது நீதிமன்றம் ஆராய்ந்து வருகின்றது. அதற்கு முழுமையாக மதிப்பளிக்கும் அதேவேளை, இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய சந்தர்ப்பமொன்றாக அமையவிருக்கும் இந்தத் தீர்ப்பிற்காக நாம் காத்திருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிர்ச்சியான தீர்ப்பின் ஆரம்பம் இப்போது தொடங்கியிருக்கின்றது. இனிவரும் காலங்களில் உயர்நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்புகள் இதுபோலவே ஆச்சரியமாகவும் புதுமையாகவும் அமையப் போகின்றது.
ReplyDelete