Header Ads



அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை, கடந்த சாதனை வீரர் பிரதமர் மஹிந்த

சுதந்திர இலங்கையின் மிகச் சிறந்த தனித்துவமிக்க அரசியல் ஆளுமைகளில் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடத்தக்கவராவார். இவரது அரசியல் தலைமைத்துவம் மற்றும் செயற்றிறன்களினால் மக்கள் அளப்பரிய நன்மைகளைப் பெற்றுள்ளனர். 

இந்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தேசிய அரசியலில் பிரகாசித்த ராஜபக்ஷ பரம்பரையைச் சேர்ந்தவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது தந்தையைப் போலவே நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திலும் சுபீட்சத்திலும் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தி செயற்பட்டு வருகின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் நேரடி அரசியலில் பிரவேசித்து அரை நூற்றாண்டு அதாவது 50வருடங்கள் நிறைவடைகின்றன. 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டிய மெதமுலனவில்    முன்னாள் அரசியல் தலைவரும் அன்றைய அமைச்சருமான மறைந்த டி.ஏ. ராஜபக்ஷ மற்றும் திருமதி ராஜபக்ஷ தம்பதியினருக்கு 1945.11.18அன்று மகனாகப் பிறந்த  மஹிந்த ராஜபக்ஷ, தமது ஆரம்பக் கல்வியை காலி ரிச்மண்ட் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து கொழும்பு நாலந்தா மற்றும் தேர்ஸ்டன் கல்லூரிகளிலும் கற்றார். இவர், 22வயது இளைஞராக  இருந்த சந்தர்ப்பத்தில் அதாவது 1967ல் இவரது தந்தை டி.ஏ. ராஜபக்ஷ காலமானார்.

அக்காலப் பகுதியில் இவர் நேரடி அரசியலில் பிரவேசித்திருக்கவில்லை.   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறைந்த தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பை ஏற்று அரசியலில் பிரவேசித்த இவர், 1970இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

இதனூடாக நேரடி அரசியல் வாழ்வை ஆரம்பித்த இவர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த இளம் வயதில் பாராளுமன்ற உறுப்பினரான   பெருமையையும் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதேநேரம், இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கல்வி கற்று 1977ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தம் தந்தையின் வழியில்  அரசியல் பயணத்தை தொடர்ந்த இவர், கஷ்டப்பட்ட ஏழை மக்களின் சுபீட்சத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களை நசுக்கி அவர்களது உரிமைகளை மறுத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் கட்டவிழ்த்து விட்டது. இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிய இவர், ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்தார். அவற்றில் மறியல் போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், பாதையாத்திரைகள், மனித சங்கிலிப் போராட்டம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

இவர் 1983இல் ஷிரந்தி ராஜபக்ஷவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் பிரவேசித்ததோடு மூன்று ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார்.  1988--89காலப் பகுதியில் நாட்டில் நிலவிய இளைஞர் கிளர்ச்சியை அடக்க அன்றைய ஐ.தே.க அரசாங்கம் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அந்நடவடிக்கைகளுக்கெதிராகவும் இவர் துணிந்து முன்னின்று குரல் கொடுத்தார்.

1977இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக முற்போக்கு சக்திகளை இணைத்துக் கொண்டு, இவர் முன்னெடுத்து வந்த ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் 1994இல் ஆட்சிபீடமேற பெரும் பக்கத்துணையாக அமைந்தது.

1994இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தின் தொழில் அமைச்சராக இவர் நியமனம் பெற்றார். இந்நாட்டு தொழிலாளர்களது உரிமைகளையும் அவர்களது நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் சாசனத்தை இவர் அறிமுகப்படுத்தினார்.

அதேநேரம், நவீன யுகத்துக்கு ஏற்ப இந்நாட்டு உழைக்கும் வர்க்கத்தினருக்கு பொருத்தமான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்கவென நாட்டில் பல பிரதேசங்களிலும் தொழில் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும் இவர் நடவடிக்கை எடுத்தார். வெளிநாடுகளில் இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் இவர் செய்தார். 

1997இல் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பினூடாக இவர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவ்வமைச்சினூடாக இந்நாட்டு மீனவர் சமூகத்தினரின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களையும் இவர் முன்னெடுத்தார். 

இந்நாட்டைச் சூழவுள்ள கடல் கொண்டிருக்கும் வளங்கள் தொடர்பில் கற்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அவற்றினூடாக பயனடையவுமென சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தை இவர் ஸ்தாபித்தார்.

2001இல் துறைமுகங்கள் கப்பற்றுறை  அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற இவர், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தார்.

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற இவர், ஸ்ரீல.சு.க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குறுகிய காலத்தில் ஆட்சிபீடமேற வழிவகுத்தார். இதனூடாக 2004ம் ஆண்டில் இலங்கையின் பிரதமரானார்.

அதனைத் தொடர்ந்து சொற்ப காலத்தில் அதாவது 2005நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். அதனூடாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்தாவது ஜனாதிபதியாக இவர் பதவியேற்றார். 

ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து நாட்டில்    நீடித்துக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாத செயற்பாடுகளை சமாதான பேச்சுவார்த்தையினூடாக முடிவுக்குக் கொண்டு வருவதில் விசேட கவனம் செலுத்தினார். அந்த அழைப்புகளை புலிகள் உதாசீனம் செய்ததோடு பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடலாயினர்.

இவ்வாறான சூழலில் 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கெப்பித்திகொல்லாவையில் பயணிகள் பஸ் வண்டி மீது கிளேமோர் தாக்குதல் நடத்தி பலரை படுகொலை செய்த புலிகள், சொற்ப காலத்தில் மாவிலாறு அணையை  மூடி சுமார் 15,000விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதையும் தடுத்து நிறுத்தினர். அத்தோடு மூதூர் பிரதேசத்தில் வாழும் சுமார் 40,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை 1990இல் வடபகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது போன்று இப்புலிகள் இயக்கத்தினர் வெளியேற்றினர். பாதுகாப்புப் படையினரை புலிகள் இயக்கத்தினர் வலிந்து யுத்தத்துக்கு இழுத்தனர். இதன் விளைவாக மனிதாபிமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டிய நிலைமைக்கு பாதுகாப்பு படையினர் உள்ளாகினர்.

இந்த நிலையில் மூதூர் பிரதேசத்தை சுமார் ஆறு வார காலத்திற்குள் முழுமையாக விடுவித்து முஸ்லிம்களை நோன்பு காலத்திற்கு முன்னர் அங்கு மீளக்குடியமர்த்தவும் ஏற்பாடு செய்தார். பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையினூடாக 2009மே 19ம் திகதி புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் மஹிந்த ராஜபக்ஷ  தீவிர கவனம் செலுத்தினார். வீதி கட்டமைப்பு துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டதோடு, அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், வீதிகளுக்கு கொங்கிறீட் இட்டு அபிவிருத்தி செய்யும் திட்டம் என்பவற்றையும் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு, இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மத்தளவிலும் சர்வதேச துறைமுகம் ஹம்பாந்தோ ட்டையிலும் அமைவுற ஏற்பாடு செய்த இவர், தாமரைக் கோபுரம், தாமரைத் தடாக சர்வதேச அரங்கு, நுரைச்சோலை அனல்மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டார்.

அவர் வெளிநாடுகளுடனும் நெருக்கமான உறவை பேணி வந்திருக்கிறார். குறிப்பாக பலஸ்தீன மக்களுக்காக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வந்த இவரைக் கௌரவிக்கும் வகையில் பலஸ்தீனிலுள்ள வீதியொன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்தோடு, பலஸ்தீன அரசினால் விசேட கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சொற்ப காலத்தில் அதாவது 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு நாட்டிலுள்ள 340உள்ளூராட்சி மன்றங்களில் 239மன்றங்களின் அதிகாரத்தை அக்கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அத்தோடு 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முதன் முதலாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்று நிறைவேற்றதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார்.

இக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் இவ்வாறான சாதனைகளை அடைந்து கொள்ள அடித்தளமாக அமைந்திருப்பவர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் கடந்த 50வருட காலப் பகுதியில் அளப்பரிய சேவையாற்றி இந்நாட்டு வரலாற்றில் அழியா தடம் பதித்திருப்பவர்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

மர்லின் மரிக்கார்

2 comments:

  1. எங்களது மான்புமிகுந்த பிரதமருக்கு இறைவன் நேரானவழியையும் அவருடயசேவைகளுக்கு உயர்ந்த சன்மானங்களையும்,நீன்டஆயுளையும்,மக்களுக்கு இன்னும் அதிகசேவை செய்ய உதவியும்செய்வானாக!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.