சவூதி அரசின், சரியான முடிவு...!
“இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து இல்லை” என்று சவூதி அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த சில நாள்களாக “இந்த ஆண்டு ஹஜ் இல்லை.. புனிதப் பயணம் அடியோடு விலக்கல்’ என்றெல்லாம் வந்துகொண்டிருந்த செய்திகளைப் படித்து மனம் பெரிதும் வருந்தியது.
வருத்தத்திற்குக் காரணம் இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களின் அழைப்பும், இறைவன் ஏற்றுக்கொண்ட பொறுப்பும் தடைபட்டுவிடக் கூடாதே எனும் கவலை.
ஹஜ் பயணமும் கஅபா ஆலய தரிசனமும் மிகத் தொன்மையான வழிபாடுகள்.
ஓரிறைக் கொள்கையின் கேந்திரமான புனித கஅபா இறையாலயம் கட்டிமுடிக்கப்பட்டவுடன் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குச் சில செய்திகளை எடுத்துக்கூறிய இறைவன்,
“இந்த ஆலயத்தை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு பொது அழைப்பு விடுப்பீராக” என்று ஆணையிட்டான்.(பாக்க- குர்ஆன் 22:26-29)
“என் அழைப்பு உலகம் முழுவதும் எப்படி எட்டும்?” என்று இப்ராஹீம் நபி கேட்டபோது,“நீர் அழைப்பீராக. அதை உலகம் முழுவதும் எட்டச் செய்வது என் பொறுப்பு” என்றான் இறைவன்.
அந்தத் தூய அழைப்பு எட்டியதால்தான் இன்றைக்கும் ஹஜ் பயணம் செல்பவர்கள் “லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்- “வந்துவிட்டோம்...இறைவா, இதோ நாங்கள் வந்துவிட்டோம்” என்று அந்த அழைப்புக்குப் பதில் அளித்தபடி புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து என்று முதலில் தகவல் வந்தபோது “ஆண்டாண்டு காலமாய்த் தொடர்ந்து வந்த இந்த அழைப்புக் கண்ணி அறுபட்டுவிடுமோ” எனும் கவலை மேலோங்கியது.
இப்போது சவூதி அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
“கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பயணிகள் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆயினும் ஹஜ் ரத்தாகாது” என்று அறிவித்துள்ளது.
“மறுமை நாள் வரை ஹஜ் புனிதப் பயணம் எந்தத் தடையுமின்றி நடைபெற வேண்டும். அதற்கு வல்ல இறைவனின் திருவருள் துணை நிற்கவேண்டும்” என்று இறைஞ்சுவோமாக.
-சிராஜுல்ஹஸன்
Post a Comment