Header Ads



மனிதரின்றி வெறிச்சோடியுள்ள வணக்கஸ்தலங்களில் மயில், மான், மரை, குரங்கு, யானை, நரி ஆட்சி


- காரைதீவு நிருபர் சகா -

கொரோனா நெருக்கடி காரணமாக வணக்கஸ்தலம்மீதான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஆலயங்களுள் உகந்தமலை முருகனாலயமும் ஒன்றாகும்.

வணங்குவதற்கு மனிதர்களுக்குத் தடை விதித்த கொரோனா பறவை விலங்குகளுக்கு அனுமதியளித்துள்ளதோ என எண்ணத்தோன்றுமாப்போல் உகந்தமலை முருகனாலயம் விளங்குகிறது. ஆம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக மனிதர்கள் அங்கு செல்லமுடியாது. கடந்த இருமாதங்களாக வண்ணக்கரே செல்லமுடியாத துரதிஸ்டநிலை.

அப்படிப்பட்ட ஆலயசூழலில் தற்போது மனிதருக்கு பதிலாக மயில் மற்றும் மான் மரை குரங்கு யானை நரி போன்ற விலங்குகள் தாராளமாக உலாவருகின்றன. குமண தேசியபூங்கா வனவிலங்குகள் சரணாலயமும் அருகிலிருப்பது அதற்குச்சாதகமாகும்.

தற்சமயம் ஆலயசூழலில் நன்கு பருத்த மரைகள் சுதந்திரமாகத் திரிகின்றன. சிலவேளை மனிதரைக்கண்டாலும் அவை பயப்படுவதில்லை. தாங்கள்தான் ஆலயத்திற்குரியவர்கள் போல் அநாயசமாகத்திரிகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடியார்கள் தங்கி உண்டு உடுத்து உறங்கும் மரங்கள் நிறைந்த ஆலய வளாகம் வெறிச்சொடிக்கிடக்கிறது.

கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் கானகத்திற்கு மத்தியில் சமுத்திரத்தினருகே மனோரம்மியமான மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது இவ்வாலயம். இது அம்பாறை அம்பாறை மாவட்டத்தின் பாணமைக்கு அப்பால் லாகுகலைப் பிரதேசசெயலாளர் பிரிவில் நடுக்காட்டிற்குள் அமைந்துள்ளது.

கதிர்காமத்திற்கு காட்டுப்பாதையால் செல்வோருக்கு இறுதி ஆலயதரிப்பிடமாகவும் காட்டுபாதயாத்திரையின் நுழைவாயிலாகவும் உகந்தமலை முருகனாலயம் திகழ்கிறது. இங்கும் கதிர்காமத்தையொத்த ஆடிவேல்விழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழமையாகும்.

No comments

Powered by Blogger.