மைத்திரிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது பிரச்சினைக்குரியது: பிரசன்ன ரணதுங்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதை தான் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஏதோ ஒரு வகையில் மைத்திரிபால சிறிசேனவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர் என்ற நிலைமை ஏற்பட்டதால், பொதுஜன பெரமுனவும் அதற்கான பங்காளியாக நேரிடும் எனவும் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய குறிப்பிடத்தக்க நபர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் வழங்கவில்லை.
அது மாத்திரமல்ல தேர்தலில் தோல்வியடைந்த தமக்கு நெருக்கமானவர்களை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து, தற்போது பொதுஜன பெரமுனவில் இருக்கும் நபர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தடுத்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படி செயற்பட்ட நபர்களுக்கு 5 ஆண்டுகளின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வேட்புமனுவை கோரும் நிலைமை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த பிரச்சினையும் இல்லை என்ற போதிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது பிரச்சினைக்குரியது.
அவருக்கு போட்டியிட வாய்ப்பை வழங்கி இருக்கக் கூடாது என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment