5 மாவட்டங்களில் புதிதாக, பல்கலைக்கழகங்களை உருவாக்க தீர்மானம் - அரசாங்கம் அறிவிப்பு
மாவட்டத்திற்கு ஒரு தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்கும் கொள்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் முதற்கட்டமாக களுத்துறை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, காலி மாவட்டங்களில் இந்த ஆண்டில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அரசாங்கம் கூறுகின்றது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று -04- அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சகல மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 60 ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் கட்டம் கட்டமான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும் உள்ளோம்.
குறிப்பாக தகவல் தொழிநுட்பம், பொறியியல் உள்ளிட்ட புதிய 10 கற்கைநெறிகளை உருவாக்கவுள்ளோம்.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த ஆண்டில் களுத்துறை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, காலி ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படவுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது இயங்கும் பல்கலைக்கழகங்களிலும் புதிய கற்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 600 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவ, நோய் கண்டறியும் கற்கைகள், தொற்றுநோய் தடுப்பு கற்கைகள் என்பவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளது. வெளிநாட்டு பேராசிரியர்கள், கல்விமான்கள் பலரை வரவழைத்து இந்த கற்கைகளை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Post a Comment