Header Ads



போதைப்பொருள் பயன்படுத்த பணத்தை திரட்ட, காலி முகத்திடலில் போனி குதிரை திருட்டு - 3 பேர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு – காலி முகத்திடலில், பணம் அறவிட்டு சவாரி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட போனி குதிரை ஒன்று, போதைப்பொருள் பெற்றுக்கொள்வதற்காக திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கொம்பனித் தெரு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருடப்படப்பட்ட குறித்த போனி குதிரையும், வத்தளை – போபிட்டிய பகுதியில் வீடு ஒன்றில் உணவு, நீர் வழங்காது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் பிணையம் ஒன்றின் அடிப்படையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில், கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நிலைமை அமுல் செய்யப்பட்ட இறுதி நாட்களில், குறித்த போனி குதிரை இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

சவாரிக்கு பின்னர் குறித்த குதிரை பராமரிப்புக்காக கட்டப்படும் இடத்திலிருந்தே அது திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து அதன் உரிமையாளர் கொம்பனி வீதி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கொம்பனி வீதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நாலக உள்ளிட்ட குழு அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன்போது முதலில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார், போதைப் பொருளுக்கு அடிமையான அந்த நபரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

அதன்போது, குறித்த போனி குதிரை இருக்கும் இடம் தனக்கு தெரியும் என அந்த நபர் கூறியுள்ளார்.

அந்த குதிரை தன்னுடன் சென்ற இருவரால் திருடப்பட்டதாகவும் கூறியுள்ள அவர், பொலிஸாரை வத்தளை போபிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து மதில்களால் சூழப்பட்ட அவ்வீட்டில் உணவு, குடி நீர் இன்றி பரிதாபகராம மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போனி குதிரையை மீட்ட பொலிஸார் அதனை கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.அதன் பின்னர் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில் ஏனைய இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த போனி குதிரை திருடப்பட்டு, வத்தளை போபிட்டியவரை அக்குதிரையில் சவாரியாக சந்தேக நபர் ஒருவர் சென்று அதனை விற்பனை செய்துள்ளமையும், போதைப் பொருள் பயன்பாட்டுக்கான பணத்தை திரட்டவே அது அவ்வாறு விற்கப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்லது.

எவ்வாறாயினும் மீட்கப்பட்ட குறித்த போனி குதிரை நீதிமன்ற உத்தரவு பிரகாரம் ஒரு இலட்சம் ரூபா பிணையத்தில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.