Header Ads



சுவிஸில் கொரோனா தொற்றுடன் இரவு விடுதிக்கு சென்ற நபர்: 300 பேர் கட்டாய தனிமைப்படுத்தல்


சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் கொரோனா பாதிப்புடன் விடுதி ஒன்றில் பார்ட்டிக்கு சென்ற நபரால் தற்போது 300 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இலக்காகியுள்ளனர்.

சூரிச் மண்டலத்தில் வசிக்கும் நபருக்கு ஜூன் 21 ஆம் திகதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தெரிந்தே, அந்த நபர் ஃபிளமிங்கோ கிளப்பில் பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

இந்த நிலையில், அந்த விடுதியில் அப்போதிருந்த ஐவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே, சுதாரித்துக் கொண்ட கிளப் நிர்வாகம் ஜூன் 26 மாலை சூரிச் மண்டல சுகாதார சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட கிளப் நிர்வாகம் மற்றும் மண்டல சுகாதார சேவை, ஜூன் 21 முதல் விடுதிக்கு வந்து சென்ற அனைவரையும் தொடர்பு கொண்டுள்ளது.

இதில் 300 பேர் வந்து சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வார இறுதியை கொண்டாடும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிக கூட்டத்தை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சமூக இடைவெளியை பராமரிக்க முடியாவிட்டால், முகமூடி அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.