இந்தியாவில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய இருந்தனர் - பணம் திருப்பி கொடுக்கப்படுகிறது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாண்டு ஹஜ் யாத்திரைக்கு வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறி உள்ளது செளதி அரேபிய அரசு.
அதே சமயம் குறைந்த அளவில் உள்நாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செளதி கூறி உள்ளது.
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலிருந்தும் குறைந்தது 20 லட்சம் பயணிகள் மெக்கா மற்றும் மதினாவுக்கு ஹஜ் யாத்திரையை மேற்கொள்வார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக ஹஜ் பயணம் முழுமையாக தடை செய்யப்படும் என கருதப்பட்ட சூழலில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவில் யாத்திரிகர்களை அனுமதித்தால் மட்டும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும் என செளதி கூறுகிறது.
இதுவரை செளதியில் 1,61,005 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; குறைந்தது 1307 பேர் பலியாகி உள்ளனர்.
அந்நாட்டில் கடந்த வார இறுதியில்தான் தேசிய அளவிலான சமூக முடக்கம் தளர்த்தப்பட்டது.
இந்தியாவில் இரண்டு லட்சத்து 13 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளப் பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் செலுத்திய தொகை மீண்டும் வழங்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “கட்டணம் ஏதும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. செலுத்திய தொகை ஆன்லைன் மூலம் வங்கியில் செலுத்தப்படும், அதற்கான பணி தொடங்கிவிட்டது,” எனக் கூறி உள்ளார்.
Post a Comment