கொரோனா நெருக்கடி - ‘கிழக்கில் 13 சிறுவர் இல்லங்கள் இயங்கவில்லை’ - 950 பேர், வீடுகளுக்குச் சென்றனர்
கொரோனா நெருக்கடியால், கிழக்கு மாகாணத்தில் இயங்கிவந்த 52 சிறுவர் இல்லங்களில், 13 இல்லங்கள் மூடப்பட்டுள்ளனவென, சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாத் தெரிவித்தார்.
இதனால் கிழக்கு மாகாணத்தில் 1,350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது 400 பேரே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
சமகால கொரோனா நெருக்கடி நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் நிலைவரம் தொடர்பாக, அவர் மேலும் கருத்துரைக்கையில், “நாங்கள் சிறுவர் இல்லங்கள் என அவற்றை அழைப்பதில்லை. மாறாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் எனத்தான் அழைக்கின்றோம்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 இல்லங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 13 இல்லங்களும் அம்பாறை மாவட்டத்தில் 07 இல்லங்களுமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 52 சிறுவர் இல்லங்கள் இயங்கிவந்தன. ஆனால், இவற்றுள் 13 இல்லங்கள் தற்சமயம் இயங்கவில்லை.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 இல்லங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 07 இல்லங்களும் அம்பாறை மாவட்டத்தில் 03இல்லங்களுமாக மொத்தம் 13 சிறுவர் இல்லங்கள் இயங்காமலுள்ளன. அதாவது தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.
“இந்த மூடு விழாவால் 1,350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது ஆக 400 சிறுவர்களே வாழ்ந்து வருகின்றனர். ஏனைய 950 பேர், கொரோனா அச்சம், பாடசாலை விடுமுறை காரணமாக வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்” என்றார்.
சகா
Post a Comment