ரமழான் கற்றுத்தரும் பாடங்கள்
- எம்.எல்.பைசால் காஷிபி -
அகிலத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் கொறனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு அதற்கான பரிகாரத்தினை ஆராய்ச்சி செய்து கொண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டும் இருக்கும் நிலையில் ரமலானில் கால் பதித்துள்ளோம்.
இது போன்ற அசாதாரண நிலையினை அண்மைய உலக வரலாற்றில் எம்மால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
அல்லாஹுவின் இல்லங்களான பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு, கூட்டு வணக்கங்களுக்கான சூழ்நிலையினை முற்றாக இழந்து,பொது வாழ்வில் சங்கமிக்கும் சூழல் பெரும்பாலும் தவிர்க்கப்பட்ட நிலையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் இந்நிலையில் ரமழானை எப்படி பெறுமதி உள்ளதாக நாம் மாற்றிக்கொள்ளலாம்?
ரமழான் பல சிறப்புக்களையும், படிப்பினைகளையும் கொண்டுள்ளது.சிறிய ஒரு செயற்பாடாக இருப்பினும் அல்லஹ்வுக்காக ரமழானில் முன்னெடுக்கும் போது பல மடங்கு நன்மைகளை அல்லாஹ் தர ஆயத்தமாகி உள்ளான்.
ரமழான் தனிமனிதனையும் குடும்பத்தினையும் சிறப்பான ஒரு நிலையிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுகிறது.
அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம், பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம் ,ஷைத்தானின் தீங்குகள் தவிர்க்கப்பட்ட மாதம்,நன்மையின் வாயல்கள் திறக்கப்பட்ட மாதம் போன்ற பல சிறப்புகளைக் கொண்டுள்ள இம்மாதத்தில் வீடுகளில் இருந்து அதன் பயனை முழுமையாக பெறுக்கொள்ள முயற்சித்தல் அவசியமாகும்.
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
ரமழான் மாதம் வந்துவிடடால் சுவர்க்கத்தின் வாயல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாயல்கள் மூடப்பட்டு, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். (புஹாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மூன்று சாராரின் பிரார்த்தனைகள் அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப் படமாட்டாது (1)ஒரு பிள்ளை தனது தந்தைக்காக கேட்கும் பிரார்த்தனை (2) நோன்பாளியின் பிரார்த்தனை (3) பிரயாணியின் பிரார்த்தனை (பைஹகி).
பின்வரும் செயற்பாடுகள் மூலமாக வெற்றிகரமான முறையில் ரமழானை உயிர்ப்பித்த கூட்டத்தில் நாம் சேர்ந்துகொள்ள முடியும் இன்சா அல்லாஹ்.
1.நோன்பு நோற்றல் :
ரமழானில் நோன்பு நோற்பது எல்லோர் மீதுமுள்ள பர்ளான செயற்பாடாகும். நோன்பு நோற்பவர்களுக்கான கூலியை அல்லாஹ் பன்மடங்கு ஆக்கியுள்ளான் அதன் பெறுமதியியை நோன்பு நோற்றவர்கள் காணும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றனர்.
மேலும் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
எவர் ஒருவர் ரமழானில் ஈமானுடனும், அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் நோன்பு நோற்றால் அல்லாஹ் அவருடைய முன் பின் பாவங்களை மன்னிக்கின்றான். (புஹாரி).
2.இரவு வணக்கத்தில் ஈடுபடல்
ரமழான் கால இரவு நேரங்களில் விசேடமாக இரவு வணக்கங்களில் நின்று வணங்குதல் அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும் .
மேலும் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
எவர் ஒருவர் ரமழானில் ஈமானுடனும், அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் நின்று வணங்குகின்றாராரோ அல்லாஹ் அவருடைய முன் பின் பாவங்களை மன்னிக்கின்றான். (புஹாரி).
3.தர்மங்கள் புரிதல்
ரமழானில் அதிகம் அதிகம் ஸதகா தர்மங்களில் முடியுமான எல்லோரும் ஈடுபடல் அவசியமாகும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு அதிகம் தர்மம் செய்வதில் ஈடுபடுவார்கள் மேலும் ரமழானில் வீசும் காற்றை விட வேகமாக ஸதகா தர்மங்கள் செய்பவர்களாக இருந்தார்கள். (புஹாரி)
4.உணவளித்தல்
பசித்தவனுக்கு உணவளித்தல்,தேவை உடையவனுக்கு உதவுதல் போன்ற நற்கருமங்கள் இஸ்லாத்தில் உள்ள சிறந்த செயற்பாடுகளில் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் இஸ்லாத்தில் சிறந்த காரியம் யாது ? என வினவினார் அதற்கு நபியவர்கள் உணவளித்தல், அறிந்தவர் மற்றும் அறியாதவர்களுக்கு ஸலாம் உரைத்தல் எனக் கூ றினார்கள் .(புஹாரி)
5.நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுதல்
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் எவர் நோன்பாளிக்கு நோன்பு திறபிக்க உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு நோன்பாளியின் எவ்வித நன்மையிலும் குறைவின்றி ஒரு நோன்பாளிக்குரிய நன்மை போன்று உதவுகின்றான் (அஹமத்)
6.அல்குர்ஆனுடன் தொடர்பை அதிகரித்தல்
அல்குர்ஆன் இறக்கப்பெற்ற இம்மாதத்தில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் அல்குர்ஆனுடன் தொடர்பை அதிகரித்தல் நம்மை தரக்கூடிய விடயமாகும்.எமது முன்னோர்கள் மூன்று தொடக்கம் பத்து தினங்களுக்குள் அல்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.முடியுமான அளவு குர்ஆனை ஓதி நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
7.லுஹா தொழுகையில் ஈடுபடல்
ரசூல் (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுத பின் சூரியன் உதயமாகும் வரை அவ்வாறே அமர்ந்து கொள்வார்கள் பின்னர் இரண்டு ரகஆத் தொழுது கொள்வார்கள் என ஜாபிர் (ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அதே போன் று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
யார் ஒருவர் சுபஹ் ஜமா அத்துடன் தொழுத பின் அவ்வாறே அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து பின்னர் இரண்டு ரகஆத் தொழுது கொள்கிறாரோ அவருக்குக்கு அல்லாஹ் பரிபூரணமாக ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையினை கொடுக்கிறான் (திர்மிதி)
எனவே வீடுகளில் பெரும்பாலான நேரங்களில் தங்கி இருக்கும் நாம் முடிந்தளவு நன்மைகளைப் பெற ரமழானை பயன்படுத்தி வெற்றிபெறுவோம்.
Post a Comment