கொரோனாவுடன் போராடக்கூடிய வாழ்கையை, மக்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்
(ஆர்.யசி)
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து மக்களையும் நாட்டினையும் மீட்டெடுக்கும் போராட்டத்தில் வெற்றியை நெருங்கிவிட்டதாக கூறும் அரசாங்கம், மக்கள் கொரோனாவுடன் போராடக்கூடிய வாழ்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றது.
அமைச்சரவை தீர்மாங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பதிரன இது குறித்து கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் இலங்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சகல வைத்திய அதிகாரிகள், பணியாளர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிசார் என அனைவருக்குமே இதற்கான நன்றிகளை கூறியாக வேண்டும்.
அவர்களின் சேவையின் மூலமாகவே எம்மால் இவ்வாறான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுக்க முடிந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட மற்றும் இறப்புகள் ஏற்பட்ட பட்டியலில் இலங்கை மிகவும் தாழ்வு மட்டத்திலேயே உள்ளது.
அவ்வாறு பாதிக்கப்பட்ட 195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இலங்கை முறையே 163 மற்றும் 153 ஆம் இடங்களில் இருப்பது ஆரோக்கியமான விடயமாகும்.
ஆகவே மிக விரைவில் நாடாக எம்மால் மீண்டெழ முடியும். நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் மக்கள் தமது சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்தாக வேண்டும்.
சமூக இடைவெளி, சுத்தம், ஏனையவர்களை பாதுகாக்கும் சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக கையாண்டாக வேண்டும். மேலும் மக்கள் வழமையான தமது வாழ்கையை ஆரம்பிக்கும் வரையில் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்ததாகும்.
இந்த காலத்தில் மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி, உயிரினங்கள் என அனைத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மக்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும், அதற்கான தொழிநுட்ப, இயந்திரங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நோய் எப்போது நீங்கும் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு இருக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக மக்கள் போராட வேண்டிய நிலைமை உருவாகும்.
நோயாளர்களை கண்டறிய மிகச்சரியான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை கொண்டு நோயாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே அச்சுறுத்தலில் இருந்து விரைவாக நாட்டினை விடுவித்துக்கொள்ள முடியும் என்றார்.
Post a Comment