ஊரடங்கு சட்டபூர்வ தன்மை கொண்டதா..? நீதிவான் மொஹம்மட் மிஹாலின் விளக்கம்
(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் ஊரடங்கு நிலைமை அமுல் செய்யப்பட்டுள்ள முறைமை சட்ட விரோதமானது என எந்த தீர்மானத்துக்கும் நீதிமன்றம் வரவில்லை என நுகேகொட - நீதிவான் நீதிமன்றின் பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் இன்று அறிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர் ஒருவருக்கு அது தொடர்பில் உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 13 ஆம் திகதி மிரிஹானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் கடந்த 20 ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இது குறித்த விவகார வழக்கு விசாரணைகள் இன்று விசாரணைக்கு வந்தபோதே பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் மேற்படி விடயத்தை அறிவித்தார்.
கடந்த 20 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்ட வழக்குத் தவணையின் போது, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ' சட்ட ரீதியாக ஊரடங்கை அமுல் செய்ய சட்டத்தில் போதுமான வழிமுறைகள் இருந்தும் அவ்வாறு எந்த ஊரடங்கும் இங்கு இல்லை. சட்ட ரீதியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்யாது, ஊடகங்கள் வாயிலாக அவ்வறான நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை சட்ட விரோதமானதாகும். அப்படியானால் சட்ட ரீதியாக இங்கு ஊரடங்கு இல்லை. இல்லாத ஊரடங்குக்கு எதற்காக அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அவ்வாறு இல்லாத ஊரடங்கு சட்டத்தை மீற, ஒருவருக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக எனது சேவை பெறுநர் மீது எப்படி குற்றம் சுமத்த முடியும்?' என வாதங்களை முன்வைத்திருந்தார்.
ஊரடங்கு நிலைமை குறித்து அப்போது விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அதன்போது பதிலளிக்கவும் இல்லை.
இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் இந்த வாதம் ஊடகங்கள் வாயிலாக பிரபலமடைந்ததை தொடர்ந்து, பொலிசார் ஊரடங்கு நிலை சட்ட ரீதியிலானதே எனக் கூறி இன்று அது குறித்து நீதிமன்றில் வாதங்களை முன்வைக்க தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஆகியோர் மன்றில் இன்று-28- அது குறித்து ஆஜராகினார்.
அதன்படி இந்த வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும், அவரது உதவியாளரும் மன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.
இந்நிலையில் மன்றில் முதலில் கருத்துக்களை முன்வைக்க பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன விளைந்தார்.
'கனம் நீதிவான் அவர்களே, தற்போது நடை முறையில் உள்ள ஊரடங்கு நிலைமை சட்ட விரோதமானது என்ற அடிப்படையில், இவ்வழக்கின் சந்தேக நபருக்கு பிணையளிக்கப்பட்டதாக ஊடகங்கள் வயிலாக அறிந்துகொண்டோம். எனவே ஊரடங்கு நிலைமையின் சட்ட பூர்வ தன்மை குறித்து மன்றில் விடயங்களை முன்வைக்க எதிர்ப்பார்த்து அனுமதி கோருகின்றோம்' என்றார்.
இதன்போது நீதிவான் மொஹம்மட் மிஹால்
' அமுலில் உள்ள ஊரடங்கு நிலைமையின் சட்ட பூர்வ தன்மை குறித்து இதுவரை நீதிமன்றம் எந்த தீர்மானத்துக்கும் வரவில்லை. சந்தேக நபருக்கு பிணையளிக்க பிணை சட்டத்தின் விதிவிதானங்களே ஆராயப்பட்டன. பிணை வழங்க ஊரடங்கு நிலையின் சட்ட பூர்வ தன்மை குறித்த விடயங்கள் செல்வாக்கு செலுத்தவில்லை. இவ்வழக்கை முன்னெடுத்து செல்வதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கவே ஊரடங்கு நிலையின் சட்ட பூர்வ தன்மையை ஆராய்வது அவசியமாகும். எனினும் தற்போதைய நிலையில் நீதிமன்றம் அது குறித்து எந்த தீர்மானத்துக்கும் வரவில்லை' என தெரிவித்தார்.
' நீதிமன்றம் ஊரடங்கு நிலையில் சட்ட பூர்வதன்மை குறித்த எந்த தீர்மானத்துக்கும் வரவில்லை என கூறும் நிலையில், அதன் சட்ட பூர்வ தன்மையை உறுதிச் செய்ய நாம் விடயங்களை முன்வைக்க வேண்டியதில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சந்தேக நபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ' ஊரடங்கு நிலைமையின் சட்ட பூர்வ தன்மை குறித்த சந்தேகங்களை வளர்க்காது, சட்ட ரீதியாக வர்த்தமானி ஊடாக அதனை வெளிப்படுத்தினால், தற்போதைய நிலைமையில் மேலும் உறுதியாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் அல்லவா' என பொலிஸாருக்கு ஆலோசனையாக விடயத்தை முன்வைத்தார்.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Post a Comment