முப்படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம்...
மக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் கடற்படையினர் உள்ளிட்ட முப்படையினரை அவமதிப்புக் உள்ளாக்க வேண்டாம் என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கோரியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக சுகாதார தரப்புடன் இணைந்து பாதுகாப்பு படையினர் பெரும் பங்காற்றி வருகிறார்கள். கடற்படையினரும் இதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஜா-எல, சுதுவெல்ல நபர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டை கடற்படையினர் முன்னெடுத்த நிலையிலேயே கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
இது வெலிசறை முகாமிற்கு பரவியது. தங்களுக்கு நோய் தொற்றியதை அறியாத கடற்படையினர் விடுமுறையில் வீடு சென்றிருந்தார்கள்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுமுறையில் சென்ற சகல கடற்படை வீரர்களும் திருப்பி முகாம்களுக்கு அழைத்தோம்.
ஆனால் விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களையும் குடும்பத்தினரையும் ஒதுக்கும் நிலை சில ஊர்களில் நிகழ்ந்துள்ளது கவலைக்கிடமான விடயமாகும்.
மக்கள் மத்தியில் கொரோனா தொற்றுவதை தடுக்க செயற்பட்ட நிலையிலே படையினருக்கு கொரோனா தொற்றியுள்ளது. தமது ஆரோக்கியம் குறித்து சிந்திக்காமல் அவர்கள் முன்வந்து செயற்பட்டார்கள். பயங்கரவாத யுத்தத்தின் போதும் அவர்கள் தான் முன்வந்து செயற்பட்டார்கள். இயற்கை அனர்த்தங்களின் போதும் சுனாமி அனர்த்தத்தின் போதும் மக்களை பாதுகாக்க அவர்கள் தான் செயற்பட்டார்கள்.
ஆனால் அவர்கள் இவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்கள் அவர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்.
எனவே இவ்வாறான விடயங்களில் ஈடுபடாது அவர்கள் செய்த சேவை குறித்து சிந்தித்து செயற்படுவதோடு, சுகாதார சேவையாளர்களுடன் முன்னின்று இவ்வாறு பணி புரியும் படையினருக்கு உதவும் வகையில் ஒத்துழைப்பு வழங்கி, அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் துன்புறுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அனைவரும் இணைந்து இந்த கொரோனா நோயை ஒழிக்க செயற்படுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment