உலகப் பொருளாதார நெருக்கடியை, வலிமையாக சவுதியால் எதிர்கொள்ள முடியும்
கரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சவுதி அரேபிய அரசு வலிமையாக எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் முகம்மது அல்-ஜாதான் கூறியுள்ளார்.
சவுதி அரபியாவிடம் பெரிய அளவில் இருப்பு இருக்கிறது. அதேபோல் குறைந்த அளவிலேயே கடன் சுமையைக் கொண்டுள்ளது. எனவே தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியை வலிமையாக சவுதியால் எதிர்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சவுதி நிதி அமைச்சர் முகம்மது அல்-ஜாதான் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
அதில் அவர் பேசும்போது, கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட மிகப் பெரும் நெருக்கடியை உலகம் நடப்பு ஆண்டில் எதிர்கொள்ளும் என்று கூறினார்.
சவுதி அரேபிய அரசு அதன் குடிமக்கள் மற்றும் அங்கு வசித்து வரும் அனைவரின் உடல்நலன் மீதும் கூடுதல் அக்கறையைக் கொண்டுள்ளது என்றும் நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் வெளிப்படையான நிதிக் கொள்கைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய முகம்மது அல்-ஜாதான், தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு தெளிவான நிதித் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் அளித்து வரும் ஆதரவைச் சுட்டிக்காட்டிய அவர், சவுதி அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
Post a Comment