நாட்டு மக்களிடம் இலங்கை, மனித உரிமைகள் ஆணைக்குழு விடுக்கும் வேண்டுகோள்
(நா.தனுஜா)
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் தமது சுகாதார நலனையும், ஏனையோரது சுகாதாரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதை நோக்காகக் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்விடயத்தை வலியுறுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகமவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இலங்கையர்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலக மக்களும் பாரியதொரு நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் இதுவே மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் மிகமோசமான சவால் என்பதே பல்வேறு நிபுணர்களினதும் கருத்தாகும். எனினும் இந்தச் சவாலை அனைத்துப் பிரஜைகளினதும் ஒத்துழைப்பு மற்றும் சுயகட்டுப்பாடு ஆகியவற்றின் மூலமாகவே வெற்றிகொள்ள முடியும்.
எனவே இந்தத் தீர்மானம் மிக்க சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவரும் தமது சுகாதார நலனையும், ஏனையோரது சுகாதாரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதை நோக்காகக் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தற்போதைய நெருக்கடி நிலையில் தமது நலனைப் புறந்தள்ளி இரவு, பகல் பாராமல் உழைக்கும் சுகாதார சேவையாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறுவதுடன், அவர்களது முயற்சி வெற்றியடைவதற்கு நாமனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
மேலும் உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த வைரஸ் பரவும் முறையின் அடிப்படையில் குறித்தவொரு இனத்தவர் சமூகத்தினர் மீது குற்றஞ் சுமத்த முற்படுவது பொருத்தமற்றது. நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் ஊடாகவே இந்த நெருக்கடியில் இருந்து மீளமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
Post a Comment