"அமெரிக்காவை விட, சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்" - டிரம்ப்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறையப் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,938ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 4,636 பேர் இந்த பெருந்தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர்.
எனினும், அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளவர்களின் இறப்பு விகிதம் சீனாவை விட ஒரு சதவீதம் குறைவாக, அதாவது 4.5%ஆக உள்ளது.
அதுமட்டுமின்றி, தனது அரசாங்கம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்பட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசுகள் குறைவான வென்டிலேட்டர்களை பயன்பாட்டில் வைத்திருந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரத்துக்கு மாகாண அரசுகள் எப்படி படிப்படியாகப் புத்துயிர் அளிக்க உள்ளன என்பது குறித்தும் அவர் விளக்கினார்.
BBC
Post a Comment