ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன - நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 70 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா நிதியை வழங்க 40 பில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் நாட்டில் நிதி நெருக்கடி எதுவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
காலி பத்தேகம தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“ அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கு அமைய நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு நிதி அதிகாரங்கள் கிடைக்கும். அந்த அதிகாரம் தேர்தல் நடத்தப்படும் வரை மாத்திரமல்ல தேர்தல் நடத்தப்பட்டு வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கும் வரை ஜனாதிபதியிடம் இருக்கும். இதனால் நிதி முகாமைத்துவம் தொடர்பான எந்த பிரச்சினைகளும் இல்லை. இதனால் பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியமில்லை.
அதேபோல் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது தேர்தல் ஆணைக்குழு என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழு ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மே 2 ஆம் திகதி மீளாய்வு செய்து அந்த தினத்தில் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், தேர்தலுக்கு செல்லும் எவ்வித அவசரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு. தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்தை தலைவணங்கி ஏற்றுக்கொள்வோம்” எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
மேலே உள்ள கருத்துக்களை வௌியிட்ட அமைச்சர் பத்திரன அவருடைய கருத்துகளுக்கு பொறு்ப்புக் கூறுவாரா? ஏப்ரல் 30 திகதிக்குப்பிறகு நிதி நிர்வாகத்தைக் கையாளும் உரிமை சனாதிபதிக்கு இல்லை.அது பாராளுமன்றத்துக்குத்தான் உள்ளது என மேல் நீதிமன்றத்தில் தற்போது முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகளைப் பொறுத்துத்தான் இந்த மந்தி(ரி)யின் கருத்தின் உண்மையை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
ReplyDelete