தேர்தல் ஆணைக்குழுவிற்குள்ளும் உச்சகட்ட முரண்பாடு, எப்போது தேர்தல் நடைபெறப் போகிறது..?
9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இடையே கருத்தியல் ரீதியாக உச்சகட்ட முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான அச்சநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாத நிலையில் தேர்தலுக்கான திகதியை அறிவிக்ககூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்து வருகினறார்.
எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தற்போதைய சூழலில் மே 28ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக அறிவித்து விட்டு பின்னர் நிலைமைகள் சுமகமடையாத பட்சத்தில் மே மாத நடுப்பகுதிக்குப் பின்னர் ஒரு நாளியில் தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதற்கான அறிவிப்பினை விடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.
முக்கிய கூட்டம் நாளை இவ்வாறான நிலையில் நாளை திங்கட்கிழமை எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதியா அல்லது 28 ஆம் திகதியா பொதுத்தேர்தலை நடத்துவது என்பது பற்றியும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்ததேசப்பிரியவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.
தொடர் சந்திப்புக்கள்
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கலந்தாய்வு நிறைவடைந்த கையோடு நாளையும் நாளை மறுதினமும் தற்போதைய நிலைமைகள் மற்றும் நிலைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக சுகாதர தரப்பினர் வைத்திய நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, தேர்தல்கள் கண்காணிப்புக்குழுக்கள் உட்பட பலதரப்பட்ட தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்புக்களின் அடிப்படையில் மீண்டுமொருமுறை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து இறுதி முடிவினை பெரும்பாலும் நாளை மறுதினம் 21ஆம் திகதி அறிவிப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
அடுத்த கட்டம்
தேர்தல்கள் ஆணைக்குழுவானது வேட்புமனுக்காளுக்கான விரும்பு வாக்கு இலக்கங்களை தயார் செய்யும் பணி உள்ளிட்ட முதற்கட்ட செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதோடு நாளை மறுதினம் எடுக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைளை எடுக்கவுள்ளது.
ஆணைக்குழு உறுப்பினரின் வெளிப்படையான கருத்து
இதேவேளை 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ண ஜீவன் ஹூல் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவிக்கையில்,
தற்போதைய சூழலில் நாட்டின் இயல்பான நிலைமை காணப்படவில்லை. ஆகவே இயல்பான நிலைமையொன்று முழுமையாக ஏற்படுத்தப்படாத சூழலில் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதானது பொருத்தமற்ற செயற்பாடாகும். காரணம், அவ்வாறு திகதி அறிவிக்கப்பட்டு விட்டால் தேர்தலுக்கான பிரசாரங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விடும்.
அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்ற பட்சத்தில் தேர்தலை மீண்டும் பிற்போடுவதென்பது சாத்தியமற்ற விடயமாகும். ஆகவே இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. நிலைமைகளை சமாளிப்பதற்கான தற்காலிக முடிவுகளை எடுப்பதை தவிர்த்து நிரந்தமான தீர்மானங்களை எடுத்து அறிவிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகின்றது என்றார்.
பின்னணியும் நெருக்கடியும்
முன்னதாக 8 ஆவது பாராளுமன்றம் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் கலைக்கப்பட்டு 9 ஆவது பாராளுமன்றத்திற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்திருந்தது.
அதனையடுத்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய பாராளுமன்றத்தினை ஜுன் 2ஆம் திகதிக்கு முன்னதாக கூட்டவேண்டியது அவசியமாகின்றது.
அவ்வாறு புதிய பாராளுமன்றம் கூட்டத்தவறும் பட்சத்திலோ அல்லது தேர்தல் நடத்தப்படாது விடும் பட்சத்திலோ அது அரசியலமைப்புச் சட்ட ரீதியான நெருக்கடிகளை ஏற்படுவதற்கு வழியேற்படுத்தி விடும்.
அந்த நெருக்கடிகளை தவிர்க்க வேண்டுமாயின் தேர்தல் பிரசாரங்களுக்கு 5முதல் 7வாரங்கள் வரையில் கால இடைவெளியை வழங்கும் வகையில் மே இறுதியில் தேர்தல் நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. ஆகவே தான் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதியொன்றை அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் நாட்டின் அசாதாரண சூழலை கருத்திற் கொண்டு தேர்தலை நடத்துவதா இல்லையான என்பது பற்றி தீர்மானம் எடுக்குமாறும் தேவை ஏற்படின் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளார் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி கோத்தாபயவுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார்.
எனினும் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறப்போவதில்லை என்பதை உறுதியாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஊடாக பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளதோடு அதில், தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கான தனது விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதோடு ஆணைக்குழுவிற்கு உள்ள தற்துணிவின் அடிப்படையில் தீர்மானத்தினை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஆர்.ராம்)
Post a Comment