பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர்களிடம் தமிழரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சைகள், தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஆகஸ்ட்டில் நடைபெறும் எனவும் மே 11 ஆம் திகதி பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இது தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருடன் மாவை சேனாதிராஜா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளைப் பொருட்படுத்தாமல், ஊரடங்கு நடைமுறையை விலக்குவதும் எதிர்மாறான நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்திவிட்டதாக காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் மாவை சேனாதிராஜா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தருணம் வந்துவிட்டது என்ற ஒரு மாயையை மக்களிடம் ஏற்படுத்த முயல்வதாகவும் அதனூடாக குறுகிய காலத்துக்குள் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடையும் பெரும் அச்சமே உருவாகும் எனவும் மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார்.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் மாணவர்களுக்கான பரீட்சைகள் நடாத்துவதையும் ஒத்திவைக்க வேண்டும் எனவும் இவ்வாண்டு இறுதி வரை மருத்துவ நிபுணர்களின் ஆய்வுகள், அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment