ரயில் சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு, பல அறிவுறுத்தல்கள் இதோ
நாளை 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் வரையறுக்கப்பட்ட வகையில் தளர்த்தப்படவுள்ளதுடன், அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்புரியும் பணியாளர்களின் நலன் கருதி 5000 பஸ்களும் 400 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட மாவட்டங்களில் பயணிகள் ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும்.
இந் நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது ரயில்சேவைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை ரயில்வே திணைக்களம் பல அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அவையாவன:
ஒரு ரயில் பெட்டியின் உள்ளே 50 பயணிகள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் ரயில் நிலையங்களுக்கு செல்லும்போதும் மற்றும் ரயில்களுக்குள்ளும் முகக்கவசங்களை அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் எச்சில் துப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் ரயில் பயணச் சீட்டுக்களை வாங்குவதற்கு ஒரு மீட்டர் தூரத்தை பயணிகள் கடைபிடிக்க வேண்டும். ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் யாசகம் எடுப்பதும், வர்த்தகத்தில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் எந்தவொரு நபரும் ரயில்களில் இருந்து வெளியேற்றறப்படுவார்கள்.
அதேநேரம் காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
Post a Comment