ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில், பொதுமக்கள் செயல்படவேண்டிய முறைகள் இதோ
"கொரோனா வைரசு தொற்று அனர்த்தம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள் செயல்பட்வேண்டிய முறை குறித்த வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில் மக்கள் செயற்படவேண்டிய இந்த புதிய பொறிமுறையை மே 04ஆம் திகதி அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது".
கொரோனா வைரசை தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இந்த விடயங்களை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் உற்சவங்கள் நடத்தல், சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல், குழுக்களாக இணைந்து செயற்படுதல், பல்வேறு சமய நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், சங்கீத இசைக் கச்சேரிகளை நடத்துதல் முதலானவை தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செயல்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.
Post a Comment