கல்குடா சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினால், உலர் உணவு பொதிகள்
- எஸ்.எம்.எம்.முர்ஷித் -
கல்குடா கொவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் எட்டு கிராம சேகவர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
சமூக நிறுவனங்களின் கூட்டமைபின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் தெரிவு செய்யப்பட்ட 1497 குடும்பங்களுக்கும், கேணிநகர் கிராமத்தில் 150 குடும்பங்களுக்கும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை கிராமத்தில் 50 குடும்பங்களுக்கும், புணாணை கிராமத்தில் 50 குடும்பங்களுக்கும், மயிலரங்கரச்சை கிராமத்தில் 50 குடும்பங்களுக்குமாக வழங்கி வைக்கப்பட்டது.
கல்குடா ஜம்இய்யதுல் உலமா, ஸகாத் நிதியம், பிரதான பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்கள், உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஆகியவைகள் ஒன்றிணைந்து கொவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினை உருவாக்கி கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment