மன்னாரில் 4000 கிலோ பூசணிக்காயை, விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை விவசாயி
மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பூசணிக்காய் பயிர்ச்செய்கையினால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள போதும் புசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் ஏழை விவசாயி தவித்து வருகிறார்.
சுமார் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை குறித்த விவசாயி அறுவடை செய்துள்ளார். குறித்த விவசாயிக்கு பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தோட்டச் செய்கையை வாழ் வாதாரத் தொழிலாக செய்து வரும் இவர் ஏற்கனவே கடனைப் பெற்று பூசனி செய்கையை மேற் கொண்டுள்ளார்.
தனது தோட்டத்தில் விளைந்து அறுவடை செய்து வைத்துள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ பூசனிக்காயை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றார்.
நாடு சீராக இருந்த போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பூசணி பயிர் செய்துள்ளார். நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. அறுவடை செய்யும் நேரத்தில் ´கொரோனா´ வைரஸ் பிரச்சினையால் போக்குவரத்து தடைகள் ஏற்பட்டு தம்புள்ளை மரக்கறி சந்தை சீராக இயங்கவில்லை.
இதனால் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் வீட்டில் உள்ள மூன்று அறைகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் கஸ்டப்பட வேண்டி உள்ளது என விவசாயி ஏ.நிமல்றாஜ் தெரிவித்தார்.
தோட்டம் செய்வதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள செலுத்த வேண்டும். அரசாங்கம் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்வதாக அறிய முடிகின்றது. அது பற்றி எந்த முடிவும் இல்லை.
எனவே அரச அதிகாரிகள் எம்மீது அக்கறை கொண்டு இவற்றை விற்பனை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் பூசணி தேவைப்படும் உள்ளுர் வியாபாரிகள் 0772378121 என்னும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பூசணிக்காயை கொள்வனவு செய்து உதவிபுரியுமாறும் அவர் கேட்டு கொண்டார்.
-மன்னார் நிருபர் லெம்பட்-
Post a Comment