Header Ads



ரமழான் கற்றுத்தரும் பாடங்கள் - 2

ஒரு மனிதன் ரமழான் மாதம் என்றில்லாமல் பொதுவாக பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இருப்பினும்  ரமழான் மாதம் நோன்பு நோற்ற  நிலையில் அதனை பின்பற்றும் போது நோன்பு சிறப்புறுவதுடன் பல நன்மைகளைப் பெறுவதற்கும் ரமழான் அல்லாத காலங்களில் அதற்கேற்ப நடந்து கொள்வதற்குக்கும் ரமழானில் பின்பற்றப்படும் ஒழுக்கங்கள் துணைபுரியும். 

இந்த வகையில் இரு வகையான  ஒழுக்கங்கள் குறித்து இங்கு   நோக்க  முடியும் .
1.அவசியம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் 
அல்லாஹ் ஒரு மனிதன் மீது விதியாக்கிய தொழுகையினை நியமமாக நிறைவேற்றுதல் :
                 தொழுகை  இஸ்லாத்தின் கடமைகளில் முதன்மையானது. தொழாத நிலையில் ஒரு மனிதன் எந்த செயற்பாட்டினை முன்னெடுத்த பொழுதிலும் அது அல்லாஹ்விடம்  ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஒவ்வொரு மனிதனும் தன்மீது கடமையாக்கப்பட்ட  தொழுகையினை அதன் சட்டதிட்டங்களைப்  பேணி  வீடுகளில் தங்கியுள்ள நிலையில் நியமமாக தொழ தன்னை தயார்படுத்திக் கொள்வது அவசியம். 
வீடுகளில் உரிய நேரத்திற்கு தொழாது  வீணாக நேரங்களை கழித்து விட்டு விரும்பியபடி தொழுது கொள்ளுதல் தொழுகையினை பாழ்படுத்திய  பிரிவினராகவே  கணிக்கப்படுவர். 

அல்குர்ஆனில் அல்லாஹ்  கூறுகின்றான்
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. (19:59-60)
நபி  (ஸல் ) அவர்கள் கூறினார்கள் 
யார் ஒருவர் நாளை முஸ்லிமாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவர் ஐவேளை தொழுகையினை பேணிக்கொள்ளட்டும் (முஸ்லிம்)
தர்க காரணம் இன்றி தொழுகையினை உரிய நேரத்திற்கு தொழாமல் இருந்து  அவன் தவறிப்போன தொழுகையினை நூறுதரம் தொழுதாலும் அது ஈடாகாது என அதிகமான உலமாக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எனவே  வீடுகளில் தங்கி இருந்தாலும் உரிய நேரத்திற்கு தொழுது அதேபோன்று  தமது குடும்பத்தினையும் அவ்வாறே வழிப்படுத்த இக்காலத்தினைப்  பயன் படுத்திக்கொள்வோம்.  
அல்லாஹ்வும் ரசூலும் தடுத்த அனைத்து விடயங்களையும் தவிர்ந்து வாழ்தல்
பொய் பேசுதல், புறம் பேசுதல், இட்டுக்கட்டுதல்,அவதூறு பரப்புதல், மனம் நோகும் படி நடத்தல்,கோள் சொல்லுதல் ,உள்ளத்தினை   பாழ் படுத்தும்   காட்சிகளை அல்லது சப்தங்களை இரசித்தல், தடுக்கப்பட்ட  பானங்களை அருந்துதல்  போன்ற செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல் நோன்பை புனிதப்படுத்தும்

அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் 
பொய் பேசுதல்
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.16:116
நபி  (ஸல் ) அவர்கள் கூறினார்கள் 
நிச்சயமாக பொய் கெட்ட   கருமங்களுக்கு இட்டுச்செல்லும் கெட்ட கருமங்கள் நரகத்திற்கு கொண்டு செல்லும் (புஹாரி)
அல்லாஹ்  கூறுகின்றான் 
பிறர் குறைகளை துருவித் துருவி ஆராய்தல்
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன் (49:12).
நபி  (ஸல் ) அவர்கள் கூறினார்கள் 
புறம் சொல்லுதல்
பொய் சொல்லி புறம் சொல்லி திரிபவர்கள் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள் (புஹாரி)
'பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!'(புகாரி)
அல்லாஹ்  கூறுகின்றான் 
வீணான பேச்சுக்களை தவிர்த்தல்
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.(31:6)
மேற்படி விடயங்களில் இருந்து தவிர்ந்து நோன்பை  சிறந்த முறையில் பயன்படுத்த எல்லோரும் முயற்சிப்போமாக.

எம்.எல்.பைசால் காஷிபி 

No comments

Powered by Blogger.