Header Ads



சட்டத்தரணி ஹிஜாஸ் கைது - 2 மனுக்கள் தொடர்பில் ஆஜராக சட்டமா அதிபருக்கு மேன் முறையீட்டு மன்று அறிவித்தல்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை  உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்த,  உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்த, பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராக இன்று -30- மேன் முறையீட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பியது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க, தேவிகா அபேரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில்  பரிசீலனைக்கு வந்தது.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன மற்றும்  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்  ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா,  சாலிய பீரிஸ் உள்ளிட்ட 5 ஜனாதிபதி சட்டத்தரணிகளும் மேலும் 30 இற்கும் அதிகமான சட்டத்தரணிகளும்  மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராக முற்பட்டனர். இதன்போது தற்போதைய சூழ் நிலையைக் கருத்திக் கொன்டு  அவர்களில்  சிலருக்கு மட்டுமே மன்றில் ஆஜராக மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்தது.

பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன,  சி.ஐ.டி. பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் இவ்வழக்குகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கைதுசெய்தமை சட்டத்துக்கு முரணானது எனவும்,  அவரை உடனடியாக கைதிலிருந்து  நீதிமன்ற்ல் ஆஜர் செய்ய உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து எந்த சட்டவாதியும் மன்றி்ல் ஆஜராகவில்லை.  எனினும் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள், தாம் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல்களை நேரடியாக கையாளுவதற்காக குறிப்பிட்டுள்ளனர், 

இந்நிலையில் சட்ட மா அதிபருக்கு இது குறித்து ஆஜராக மீள அறிவித்தல் பிறப்பித்த மேன் முறையீட்டு நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

1 comment:

  1. யாஅல்லாஹ் ஹிஜாஸையும் அதுபோன்று அநியாயமாக சிறையில் அடைத்து வைத்திருக்கும் அனைத்து முஸ்லிம் ஏனைய சிறைக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய உதவி செய்வாயாக.

    ReplyDelete

Powered by Blogger.