Header Ads



உடலில் குண்டு சிதைவுகளோடு, சாதனை படைத்துள்ள 2 மாணவிகள்

நேற்றைய தினம் (27)  வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாற்று திறனாளி  மாணவிகளான செல்வி பவதாரணி கெங்காதரன், செல்வி விதுர்சிகா மதியழகன் ஆகியோர் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 2009 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இன்றுவரை இடுப்புக்கு கீழே இயங்கமுடியாது சக்கரநாற்காலியின் உதவியோடு கல்வியை தொடர்ந்துவரும் குறித்த மாணவிகள் இந்த பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களது ஆறாவது வயதில்  எறிகணை தாக்குதலாலும் , துப்பாக்கி சூட்டினாலும் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு வடுக்களை சுமந்து, வலிகளை தாண்டி சக்கர நாற்காலியில் பாடசாலை சென்று சாதரண தரப் பரீட்சையில் சாதித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில் வசித்து வருகின்ற செல்வி பவதாரணி கெங்காதரன் என்ற மாணவி இறுதி யுத்தத்தின் போது எறிகணை தாக்குதலில் தனது தந்தையாரை இழந்த நிலையில் அதே சம்பவத்தில் முள்ளந்தண்டில் படுகாயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் உடலில் குண்டு சிதைவுகளோடு வாழ்ந்து வருபவர்  8 ஏ , பி சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரைப்போன்றே மதியழகன் விதுர்சிகா என்ற மாணவியும் தனது ஆறாவது வயதில் செட்டிகுளம் ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் தனது அண்ணனோடு சேர்ந்து  படுகாயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக சக்கர நாற்காலியின் உதவியோடு கல்வி கற்று வந்த நிலையிலும் சிறந்த பெறுபேறாக 6 ஏ தர சித்திகள் B ,2 சி தர சித்திகள் என்ற பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளார் .

1 comment:

Powered by Blogger.