தாய், சகோதரனுடன் சென்ற 10 வயது சிறுமி மின்னல் தாக்கி பலி
சேனைப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள, தனது தாய் மற்றும் சகோதரனுடன் சென்ற பத்து வயது நிரம்பிய சிறுமி மின்னல் தாக்கி பலியான சம்பவமொன்று நேற்று -18- மாலை கொஸ்லந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொஸ்லந்தை பகுதியின் ஓக்வில் தோட்டத்தினைச் சேர்ந்த மோகன்ராஜ் ருக்சி என்ற பத்து வயதுச் சிறுமியே மின்னல் தாக்கி பலியாகியுள்ளார்.
ஓக்வில் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமியும் அவரது தாய் மற்றும் சகோதரனும் சேனைப் பயிர்ச்செய்கையினை பாதுகாக்கவும், காட்டு யானைகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மரமொன்றின் மேல் குடில் அமைத்து இரவு வேளைகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று கடும் மழை பெய்து கொண்டிருப்பதையடுத்து இடி மின்னல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் மின்னல் தாக்கி இச்சிறுமி கீழே விழுந்துள்ளார். உடனடியாக இச்சிறுமி வெல்லவாய அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் அச்சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment