மனித இனத்தை இந்த பேரழிவிலிருந்து பாதுக்காப்பதற்கு, துணை நிற்கவேண்டியதுவே இன்றைய தேவை
கண்ணுக்குத் தெரியாதே விரோதியோடு ஒரு உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும்; ஒவ்வொரு பிரதேசங்களும்; ஒவ்வொரு வீடுகளும் சிறைகளாக மாறியுள்ளன. தமது குடிமக்களை பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடுகள் அரசுகளுக்கு இருப்பதால் அவை தமது உச்ச செயல் திறனில் செயலாற்ற வேண்டிய இக்கட்டுக்குள் மாட்டிக்கொண்டுள்ளன. அதிலும் ‘அறியாத ஒருவரை அறியாத இன்னொருவரிடமிருந்து’ பாதுக்காவேண்டிய நிலைமை மிகச்சிக்கலானது.
உலகத்தில் ஜாம்பவான்களாகவும் சண்டியர்களாவும் தம்மைக் காட்டிக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகள் கூட தமது மக்களை பாதுகாக்க முடியாது திணறிக் கொண்டிருக்கிற நிலையில் நமது தாய்நாடு இலங்கையில் இந்நோய் தொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், குறிப்பாக அரசின் அர்ப்பணிப்பு, சுகாதாரத் துறையினரின் தன்னலமற்ற – தம்முயிரை அடகு வைத்து செயல்படுகின்ற தன்மை, ஆயுதப்படையினரின் அர்ப்பணிப்பு என்பன எம்மை இதுவரையில் பாதுகாத்து வருவதில் பாரிய பங்களிப்புச் செய்கின்றன.
பொது எதிரிக்கு இனம் தெரியாது. சிங்களவரும், தமிழரும், முஸ்லிமும் மற்றையோரும் ஒன்றே. இவ்வனைவரையும் காப்பாற்றுவதில் இலங்கை அரசு இதுவரை எந்த பாகுபாட்டையும் காட்டவில்லை. அவ்வாறு காட்டுகின்ற நிலைகூட வரும் என நாம் எதிர்பார்க்கவில்லை.
இன்று நடந்த முடிந்துள்ள, ‘முஸ்லிம் ஒருவரின் சடலம் எரிக்கப்பட்ட’ சம்பவம் எந்த சூழ்நிலைகளின் கீழ் நடைபெற்றது என்பது நாம் அறியாத விடயம். பொது எதிரியின் வீரியம் பற்றி உலகின் எந்தவொரு விஞ்ஞா னிக்கும் தெரியாதிருக்கின்றபோது நடந்தேறிய சம்பவத்தின் பின்னணிகளை கிரகிக்கின்ற பலம் நமக்குக் கிடையாது.
பிழை நடந்திருந்தாலும், அதனை நம்மால் ஜீரணிக்க முடியாவிட்டாலும், அது எந்த நிலைமைகளில் நந்தேறியிருந்தாலும் அதனை பாரிய பிரச்சினயாக மாற்றிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இதுவல்ல. குறிப்பாக தொடர்புசாதனத் தளங்களினூடாக அரசை விமர்சிப்பதும் அதற்கு உடனடியாக இனவாதச் சாயம் பூசுவதும் அறிவுடைமையன்று.
வேறுபாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் அப்பால், இந்நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்காக நம்மால் இயன்ற பணிகளை இந்த நாட்டிற்கு ஆற்றுவதே நம்முன் இருக்கின்ற முதல் வேலையும் கடமையும். வீட்டினுள் முடங்கிக் கிடப்பதுதான் ஒருவரால் செய்யக் கூடிய அதி குறைந்த விடயமாக இருந்தால் அதை மட்டுமாவது செய்து மனித இனத்தை இந்த பேரழிவிலிருந்து பாதுக்காப்பதற்கு துணை நிற்கவேண்டியதுவே இன்றைய தேவை. அதுவே எமது மார்க்கக்கடமையும்கூட!
எல்லாத் தரப்புகளிலுமிருந்தான கடந்த வருட அநியாயங்களின் பின் இப்போதுதான் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தவர்களுக்கும் இடையிலுள்ள உறவு ஓரளவு சீரடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர்
பணிப்பாளர், சிவில் சமூக சம்மேளனம், காத்தான்குடி
Post a Comment