வெளிநாடுகளில் வாழ் இலங்கையர்களுக்கு, வெளிவிவகார அமைச்சின் முக்கிய தெளிவுபடுத்தல்
(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வரையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியிருக்கிறது.
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சினால் இன்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் தெற்காசிப்பிராந்திய நாடுகளுக்கான செயற்திட்டத்தின் கீழ், கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாகப் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வெளிநாடுகளில் (தெற்காசியப் பிராந்திய நாடுகளில்) வாழும், தொழில்புரியும், கல்வி கற்கும் இலங்கையர்களுக்கு உதவி புரிவதற்காக வெளிவிவகார அமைச்சு அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகின்றது. அதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்கள் மற்றும் தொழில்புரியும் இலங்கைப் பிரஜைகளின் விபரங்களைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை குறைவடையும் வரை வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள், அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதேவேளை புதுடில்லி, சென்னை, மும்பை, காத்மண்டு, இஸ்லாமாபாத், டாக்கா, காபூல் மற்றும் மாலே ஆகிய நகரங்களில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளக் கூடியவாறான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சமூகவலைத்தளங்களின் ஊடாக அவர்கள் குழுக்களாக இணையக்கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அவர்களுக்கு அவசியமான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான விசா பத்திரங்களை நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வெளிநாடுகளிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாகப் பெரும்பாலான தெற்காசியப் பிராந்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையான இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் அவர்களுக்கான விடுதி, உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதுடன், அம்மாணவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகள் பேணப்பட்டு வருகின்றன.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் அண்மையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக கொவிட் - 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான சார்க் அவசர நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டதுடன், அதற்கான பங்களிப்பாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கியிருக்கிறது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள இலங்கைப் பிரஜைகள் அனைவரும் வெளிவிவகார அமைச்சு மற்றும் தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ஆகியன இணைந்து வடிவமைத்திருக்கும் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளதல்' என்ற இணையப்பக்கத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
Post a Comment