கொரோனா வைரஸ்: கர்ப்பிணி பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி பணிகளில் மாற்றம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 18 பேர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கொழும்பில் (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கிறார்.
குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சிசுக்களுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அது எந்தவிதத்திலும் சிசுகளுக்கு பிரச்சினையாக அமையாது எனக் கூறிய அவர், இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த ஊசியை ஏற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
குறித்த இடங்களுக்கு அதிக அளவிலான மக்கள் ஒன்று திரளுவதை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment