Header Ads



பாலாவி, மூதூர், கண்டி, அட்டுலுகம, அக்குரணை, புத்தளம், உறவுகளே தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகமல் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி, அக்குரணை பகுதியில் இந்தியா சென்று திரும்பிய  கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்புகள்,  சென்று வந்த இடங்களை ஆராய்ந்த சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும், அக்குரணை நகரை முற்றாக முடக்கின.

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த நகரம் முற்றாக வெளித் தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்டதாகவும்,  அங்கு உள் நுழையவோ வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது எனவும்  பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே டுபாய் சென்று திரும்பிய  நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதன் பரவலை கருத்தில் கொண்டு களுத்துறை, பண்டாரகம பொலிஸ் பிரிவின் அட்டுலுகம பிரதேசம் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நகராமக   அக்குரணை நேற்று முடக்கப்பட்டது.

கண்டி வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பரிசோதனைகளின் போது, அக்குரணையைச் சேர்ந்த தொற்றாளர் கண்டறியப்பட்டார். இந்நிலையில் அவரது நெருங்கிய தொடர்பாளர்களை சுகாதார துறையும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையும் தேடிய போது முழு அக்குரணையும் கொரோனாவால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பிரதேசமாக கண்டறியப்பட்டதையடுத்து, அது குறித்து  ஆராய்ந்து கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் அக்குரணையை முடக்க ஆலோசனை முன்வைத்து நடை முறைப்படுத்தியது.

இந் நிலையில்  புத்தளம்  - கடையான்குளம் பகுதி இன்று காலை முற்றாக வெளித்தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்ட போதும், பின்னர் அந்த ஊர் மக்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள  தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் மையத்துக்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விஷேடமாக அண்மையில் மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற குழுவில் அடங்கிய ஒருவரும் கொரோனா தொற்று  தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதால்,  அவ்வாறு சென்று திரும்பிய மூன்று குழுக்கள் கொரோன அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. மலேஷியாவில் குறித்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  இந்தக் குழுக்களை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ள நிலையில் , அக்குழுவில் உள்ளடங்கிய ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் அக்குரணை, புத்தளம், பாலாவி மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய முதல் குழுவில்  அக்குரணை மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்குவதாகவும் அந்த குழு கடந்த 13 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

2 ஆம் குழுவில்  5 பேர் உள்ளடங்குவதுடன் அவர்கள் பாலாவி மற்றும் புத்தளத்தை சேர்ந்தோர் எனவும்  அவர்கள் கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளதாகவும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

அத்துடன்  6 பேரை உள்ளடக்கிய மூன்றாம் குழு 17 ஆம் திகதி நாடு திரும்பியுள்ள நிலையில்  அக்குழுவில் உள்ளடங்குவோர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தோர் என லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கூறினார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அவ்வாறு சென்று வந்த அனைவருக்கும், அவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதார துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை கொழும்பு - ராஜகிரிய பகுதியின் ஒபேசேகர புர மற்றும்  ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட அருனோதய மாவத்தை ஆகியவை தற்காலிகமாக  இன்று முடக்கப்பட்ட நிலையில் மாலையாகும் போது சாதாரண ஊரடங்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இருந்து கொரோனா தொற்று அறிகுறிகளுடன்  சிறுவர்கள் உட்பட சிலர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பகுதிகள் கடும் சுகாதார கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திறிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து முஸ்லிம் கிராமம் ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது.  களுத்துறை மாவட்டத்தின் , பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டுலுகம முஸ்லிம் ஊரே இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன்  அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர் வரை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்களும் தற்போது அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகமல் இருப்போர் அது தொடர்பில் சுகாதார மற்றும் பாதுகப்பு அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு சுகாதார, பாதுகாப்புத் தரப்புக்கள் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. 

No comments

Powered by Blogger.