Header Ads



பொதுமக்களுக்கு ஓர், உருக்கமான வேண்டுகோள்

இன்று உலகமே சோகத்தில் உறங்கிக் கொண்டிருக்க நாங்கள் மட்டும் உறக்கமின்றி விழித்துக் கொண்டிருக்கிறோம்.

கொரோணா வைரஸை பற்றி இன்று பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தாலும் உண்மையில் இது உலகளாவிய ரீதியில் பரவிக் கொண்டிருக்கும் ஓர் வீரியமிக்க வைரஸ் என்பதை மறுக்க முடியாது.

சீனாவில் தோற்றம் பெற்ற இவ்வைரஸை இன்று சீனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் இவ்வைரஸை கட்டுப்படுத்த முடியாதளவு வீரியத்தை கொண்டிருப்பதோடு அதிகளவு இறப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கின்றது.

இலங்கையிலும் இதன் தாக்கம் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரை 70 பேரை அடையாளம் கண்டுள்ளபோதும் அடையாளம் காணப்படாத பல பேர் எம்மத்தியில் இலைமறை காயாக இருந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சுகதேகியான மனிதர்களுக்கு தங்களையறியாமலேயே நோயை பரப்பிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவே அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

அதனொரு அங்கமாக ஊரடங்கு சட்டத்தை நாடு பூராகவும் அமுல்படுத்தியுள்ளது. இதன் நோக்கத்தை நாம் அனைவரும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்த சிலர் நோய்க்காவிகளை சுகதேகியான பலருக்கும் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் மேலும் தங்களை அண்டியவர்களுக்கு கொடுக்க முனைவார்கள். (அதாவது ஓர் மரவரிப்படம் போல) நோய்த் தொற்றுள்ளவர்கள் அவரவர் வீட்டிலேயே இருக்கும் பட்சத்தில் இந்நோய்த் தொற்றை பிறருக்கு பரவ விடாமல் தடுத்துக் கொள்ளலாம். ஆகவே தயவுசெய்து ஒவ்வொருவரும் சமூக நலன் கருதி தத்தமது வீடுகளிலேயே (பக்கத்து வீடுகளுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்) இருந்து கொள்ளுங்கள். உங்களது சமயம்சார் பிரார்த்தனைகளில் அதிகமதிகம் ஈடுபடுங்கள்.

சுகாதாரதுறையில் வேலை செய்யும் நாங்களும் மனிதர்களே.. இந்த உயிரியல் யுத்தத்தின் போர்வீரர்களும் நாங்களே..!எங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்கிறார்கள். நாங்களும் உங்களுக்காக இரவுபகல் பாராது தூக்கமின்றி 30 நாட்களும் லீவு இல்லாது சேவை செய்து கொண்டுதானிருக்கிறோம். நீங்கள் ஓர் கொரோணா தொற்றுள்ளவராக இருக்கும்பட்சத்தில் நாங்களே உங்களை பராமரிக்கும் நிலையையும் கொண்டுள்ளோம். அதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிகலன்களை அணிந்து சுமார் 6 மணித்தியாலங்கள் மின்விசிறியை கூட போட்டுக் கொள்ள முடியாத நிலையில் உண்ணவோ பருகவோ ஏன் சிறுநீர் கழிக்க கூட முடியாத நிலையில் நின்றவாறே கடமை புரிய வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் தோழர்களே..😢😢

சிந்தித்து செயற்படுங்கள். வருமுன் காப்பதே சாலச் சிறந்தது.

நீங்கள் ஏனோதானோவென்று இருந்துவிட்டு இறுதியில் நோய்த்தொற்றை காவிக் கொண்டுவந்து எங்களையும் நோயாளியாக்கிவிடாதீர்கள்..!!🙏🙏🙏

சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்..!!

#இறைவன் #எம்மனைவரையும் #பாதுகாப்பானாக...!!

#அல்சாத்
20-03-2020

1 comment:

  1. கொரனாவைக் கட்டுப்படுத்த அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு தொடர்பாக நாம் எமது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும்.
    இருப்பினும் காலையில் இருந்தே எமது வீதிகளில் வாகன நடமாட்டம் காணப்படுவது கவலையளிக்கிறது.
    வடக்கு கிழக்கில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் இருந்து நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமை இன்று வரை களைய முடியாத நோயாகவே இப்பிரதேசத்தில் காணப்படுகிறது.
    Helmetஅணியாமை,இரண்டுக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, ஊரடங்கு என்றால் வீதிக்கு வந்து ஒன்று கூடுவதும் என்ன ஏது என்று வினவுவதுமாக இருந்த பழக்கத்தை இன்னும் எமது மக்கள் மாற்றிக் கொள்ளாதுள்ளனர்.
    இதே நிலவரம் மற்றைய இனத்தை அடித்து நொறுக்குவதற்காக ஊரடங்கு சட்டத்தையே சாதகமாக பயன்படுத்த தென்பகுதி சிங்கள மக்களிடமும் இது விதைக்கப்பட்டுவிட்டது.
    ஆக மொத்தத்தில் சட்டத்தை சரியாக பயன்படுத்தும் இலங்கை சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது. இதற்கு அரசு,அரசியல்வாதிகள், நீதித்துறை, பொலிஸார், கல்விச் சமூகம் என அத்தனை தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம்.

    ReplyDelete

Powered by Blogger.