கொரோனா பாதித்தவர் எண்ணிக்கையை குறைத்துச்சொல்லும் நாடுகள் - Al Jazeera அதிர்ச்சி தகவல்
கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.
ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 69 ஆயிரத்து 312... இந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 982... இதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 100... என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல் மையம் கணக்கு சொல்கிறது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை கூறி இருப்பவர், தொற்றுநோய் பரவல் கணித பகுப்பாய் வில் வல்லுனராக திகழக்கூடிய ஆடம் குச்சார்ஸ்கி. இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவ கல்லூரியின் இணைப் பேராசிரியரும் ஆவார்.
கொரோனா வைரஸ் பற்றிய அவரது பார்வையும், கருத்துகளும் கவனத்தை ஈர்ப்பதாக அமைகின்றன. அதில் இருந்து...
19-ம் நூற்றாண்டின் இறுதியில் மலேரியா காய்ச்சல், கொசுக்கள் மூலம்தான் பரவுகின்றன என்று கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி ரொனால்டு ரோஸ் ஆவார்.
அவர் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு பார்வையைத் தந்துள்ளார்.
கடைசி கொசு இருக்கிற வரையில் மலேரியா காய்ச்சலை ஒழித்துக்கட்ட முடியாது என்பதுதான் மனிதர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு கொசுவையும் ஒழிக்கத்தேவையில்லை என்பதுதான் ரொனால்டு ரோஸ் பார்வையாக இருந்தது.
கொசுக்களின் அடர்த்தியை ஓரளவுக்கு குறைத்து விட்டாலே, மலேரியா காய்ச்சலால் பாதித்த ஒருவர், அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு முன்பாகவே குணம் அடைந்து விட வாய்ப்பு உண்டு.
கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் கூட இதே போன்றதொரு யோசனையை நாம் சிந்திக்க முடியும். உடல் அளவில் தனித்திருத்தல் அல்லது சமூக அளவில் விலகியிருத்தல் என்ற யோசனை வந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் இந்த நடைமுறைகள் அமலில் இருப்பதால், அவர்கள் அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு விட முடியும். அதைத்தான் வுஹான் போன்ற இடங்களில் கடைப்பிடித்தார்கள்.
தொற்றுநோய் பரவல் கணிதத்தை பொறுத்தமட்டில், ஸ்பானிஷ் புளூ, சார்ஸ் அல்லது எபோலா போன்ற வைரசில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்றால்-
இந்த நோய் தொற்றுகளைப்பற்றி புரிந்துகொள்வதற்கென்றே பல பரந்த கொள்கைகள் இருக்கின்றன. இவை பல நோய் கிருமிகளுக்கு பொருந்தக்கூடும். குறிப்பாக சொல்தென்றால் பரவலின் அளவை புரிந்துகொள்வதிலேயே.
ஆக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், சராசரியாக இந்த வைரசை எத்தனை பேருக்கு கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழும். 2 அல்லது 3 நபர்களுக்கு அவர்களால் கொடுக்க முடியும்.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறபோது, அதற்கான அறிகுறிகளை அவர் காண்பிக்க சராசரியாக எத்தனை நாட்கள் ஆகி இருக்கும் என்றால் 5 நாட்களாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்கலாம்.
மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், அது தொற்றின் ஆரம்பத்திலேயே, அதாவது அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே அல்லது லேசான அறிகுறிகள் தென்படுகிறபோதே நிறைய பேருக்கு பரவி விடுகிறது என்பதுதான்.
எபோலா, சார்ஸ் வைரஸ்களை பொறுத்தமட்டில், அவற்றை எளிதில் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும், ஏனென்றால் அதிக தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டபோது, அவற்றுக்கென்று தனித்துவமான அறிகுறிகள் இருக்கின்றன. அவர்களை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை பார்க்க இயலும். அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்து விடவும் முடியும்.
ஆனால் இந்த கொரோனா வைரசை பொறுத்தமட்டில், ஒருவர் பாதிப்புக்கு ஆளானாலும், அவர் நன்றாக இருக்கிறபோதே கூட அல்லது லேசாக இருமுகிற போதேகூட நிறைய பேருக்கு பரவி விடுகிறது.
இதனால் யார், யாருக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது மிகக் கடினமானதாகி விடுகிறது. வெளிநாடுகளில் எல்லாம் இதைத்தான் காணாக்கூடியதாக இருக்கின்றது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு முன்பாகவே பலருக்கு பரவினாலும் அவர்கள் கண்டறியப்படாமல் போகிறார்கள்.
இலங்கையிலும் இந்தியாவிலும் குறைவான பேருக்குத்தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒப்பிட்டால் மரண விகிதாச்சாரமும் குறைவாகவே இருக்கிறது.
ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் நகரங்களில் மக்கள் அடர்த்தியை பார்க்கிறபோது, இந்த எண்ணிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறதா என்றால், ஆரம்ப நிலையில் இரண்டு அம்சங்களை கண்டறிவது கடினம்.
குறைவான எண்ணிக்கையில் பாதிப்புக்கு ஆளானவர்களை கொண்டிருக்கிறபோது, தற்செயலாகவோ அல்லது மக்கள் தொகை அமைப்பினாலோ அல்லது பிற அம்சங்களாலோ, இன்னும் பரவுவது சூடுபிடிக்கவில்லை.
இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படுகிறபோது, குறிப்பாக உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிக்கிறபோது, எந்தளவுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றிய தெளிவான நிலையை காண முடியும்.
கொரோனா வைரஸ் பாதித்துள்ள பல நாடுகளில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே வெளி உலகுக்கு சொல்லப்படுகிறது என்று நினைக்கிறோம்.
கொரோனா வைரஸ் பரவலில் தவறான தகவல்களும் பரவுகின்றன.
கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் ஆரம்ப கட்டத்தில், பாதிப்புக்கு ஆளாகிற ஒவ்வொருவரும், ஒரு சிலருக்கு அதைப் பரப்புகிறார்கள்.
கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் பரவுவதற்கும், இது பற்றிய போலியான தகவல்கள் பரவுவதற்கும் ஒற்றுமை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.
இதையொட்டி, பேஸ்புக் உள்ளடக்கம் பற்றிய ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் பற்றிய ஒரு பதிவை ஒருவர் வெளியிடுகிறபோது, மேலும் 2 பேர் அதை பகிர வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிய வந்தது. ஆனால் பெரிய வித்தியாசம், நேர அளவுதான்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு சில நாட்கள் ஆகும். அதே சமயம், வலைத்தளங்ளில் 30 வினாடிகளில் பேசத்தொடங்கி விடலாம். அது கொத்து கொத்தாக பரவத்தொடங்கி விடுகிறது.
... இப்படி சொல்கிறார் அந்த வல்லுனர்.
கொரோனா வைரஸ் என்ற ஆக்டோபஸ்சின் கரங்கள் இன்னும் முழுமையாக நீளாமலேயே ஒடுங்கிப்போய் விட வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகமெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் வெளியே வருகிறது என்றால் ஐந்தில் ஒருவர் பற்றிய தகவல்களே வெளிவருகின்றன என்று அர்த்தம். இது உண்மையானால் இன்னும் இந்த கொரோனா வைரசின் வலிமை அதிகம் என்பது தெளிவாகிறது.
ஒவ்வொருவரும் தத்தம் நாட்டு அரசுகளின் விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மதித்து, தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாடுகளை விதித்து வீடுகளுக்குள்ளும், இருக்கும் இடங்களிலும் முடங்கி இருப்பதுதான் ஒவ்வொருவரையும் காக்கும். உயிரையும் காக்கும்!
- Maalai Malar
Post a Comment