பொருட்களைப் பதுக்கி விற்பனை, செய்வோருக்கு 6 மாத சிறைத் தண்டனை
(இரா.செல்வராஜா)
அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வர்த்தகர்கள் பதுக்கிவைத்து நிர்ணய விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கடந்த 15 தினங்களில் 2200 முறைப்பாடுகள் பாவனையாளர்களிடமிருந்து கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கிக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த காலத்தில் 2200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பருப்பு, ரின் மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்களே அதிகளவில் பதுக்கப்பட்டுக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறான வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு 6 மாதகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கமுடியும்.
புறக்கோட்டை மெனிங் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பல வர்த்தகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். தற்போது மரக்கறி வகைகளுக்கான நிர்ணய விலையை நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம் என்றார்.
Post a Comment