கொரோனா பரவக்கூடிய 2 வழிகள், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் முழுமையாக இல்லாதொழிக்கலாம்
இலங்கை முழுவதும் 11,842 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தேவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 72 நோயாளர்களுடன் நெருங்கிய பழகிய 11,842 பேரை தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இல்லாதொழித்தல்
கோவிட் 19 வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாடு தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் சரிவர முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் 19 வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டுப் பிரஜைகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்த அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, ஆரம்பத்தில் 2 மருத்துவ கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அது தற்போது 22 வரை நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ கண்காணிப்பு
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பு நிலையங்களின் ஊடாக 3063 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறினார்.
இலங்கையில் கோவிட் 19 வைரஸ் தொற்று பரவக்கூடிய இரண்டு வழிகள் மாத்திரமே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ கண்காணிப்பு மத்திய நிலையங்களிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பின் அதனூடாக பரவும் அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து, கண்காணிப்பு மத்திய நிலையங்களுக்கு செல்லாது, நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டவர்களின் ஊடாகவும் இந்த தொற்று பரவுதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இரண்டு தரப்பினரையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பட்சத்தில், நாட்டிற்குள் கொவிட் 19 தொற்றை முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என இராணுவ தளபதி நம்பிக்கை வெளியிட்டார்.
Post a Comment