MCC குறித்து ஆராய்வதற்கான குழுவின் ஆரம்ப அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மிலேனியம் சவால்கள் திட்டம் (MCC மிலேனியம் செலேன்ஞ் கோப்பரேஷன்) தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆரம்ப அறிக்கை இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
2019 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின்படி ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் இக்குழுவின் தலைவராக கடமையாற்றுகின்றார். போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் பட்டய கட்டிடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
சுயாதீன தொழின்மை பகுப்பாய்வு ஒன்று இக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய வகையில் விரிவானதொரு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆவணங்களை ஆராய்தல், பல்வேறு தரப்புக்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளில் பங்குபற்றி தகவல்களை திரட்டுவதற்கும் இக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் குறித்து முழுமையான அறிக்கை 04 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.02.17
Post a Comment