CID எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து, முஸ்லிம் ஒருவரிடம் கொள்ளை
நாங்கள் சி.ஐ.டி யினர், உங்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருக்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளன. உங்கள் வீட்டைச்சோதனையிட வேண்டும் என வீட்டுக்குள் புகுந்த ஆறு கொள்ளையர்கள் 40 பவுண் தங்க நகைகளையும் 29 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணியளவில் அக்குறணை அம்பத்தென்ன – பூஜாபிட்டி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது வீட்டு உரிமையாளர் அக்குறணையில் நகைக்கடையொன்றினை நடத்தி வருபவராவார்.அவர் அன்று இந்தியாவுக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தை குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
அன்று இரவு 9.00 மணியளவில் வீட்டுக்கு வந்த அறுவர் தம்மை சி.ஐ.டி யைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். சி.ஐ.டி அடையாள அட்டைகளையும் காண்பித்துள்ளனர். வீட்டு உரிமையாளரையும் விசாரித்துள்ளனர். அவர் இந்தியாவுக்குச் சென்றுள்ளதாக அவரது மனைவியினால் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களான ஐ.எஸ் பயங்கரவாதிகள் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனனர். அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரது மனைவியிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அறுவரில் இருவர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டிருக்கையில் ஏனைய நால்வரும் வீட்டினை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். வீட்டினை சோதனை நடத்திய பின்பு சிறிது நேரத்தில் இது தொடர்பில் மீண்டும் அழைப்பதாகக் கூறிவிட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
பின்பு வீட்டின் கீழ் மாடியையும் மேல்மாடியையும் சென்று பார்த்த போது தங்க நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. சிவில் உடையில் வந்தவர்கள் தாங்கள் சி.ஐ.டி எனக்கூறி அடையாள அட்டைகளையும் காண்பித்தனர். நாங்கள் அவர்களை சி.ஐ.டி யினர் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என நகைக்கடை உரிமையாளரின் மனைவியின் தந்தை எம்.எம்.எஸ்.ஏ.பரீட் தெரிவித்தார். உடன் இது தொடர்பில் அலவத்துகொட பொலிஸில் முறைப்பாடு செய்தோம். சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள் என்றார். அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரித்தார்.-Vidivelli
THIS IS WHAT THEY DID TO TAMILS DURING THE LTTE TIMES.NOW THE SAME FATE HAS FALLEN ON POOR MUSLIMS.
ReplyDelete