ரிஷாத்தையும், மனைவியையும் விசாரிக்க CID தீர்மானம் : நீதிமன்றுக்கு அறிவித்தது
(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவிக்குச் சொந்தமான வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள ச.தொ.ச. நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் கடந்த 52 நாள் அரசாங்கத்தின் காலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தவையாகும் என்று குற்றபுலனாய்வு திணைக்களம் நேற்று கல்கிஸ்ஸை பிரதான நீதிவான் மொஹமட் மிஹாலுக்கு அறிவித்தது.
ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது மனைவியான கே.எம்.ஏ.ஆய்ஷா ஆகியோரிடம் விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டபிள்யூ. திலக்கரத்ன ஆகியோருக்கு, கடந்த வாரம் ச.தொ.ச. நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த ஏழாம் திகதி இந்த விடயம் தொடர்பில் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்து பெற்றுக் கொண்ட சோதனை உத்தரவுக்கமைய சோதனை நடவடிக்கைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீட்டு உரிமைப்பத்திரங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த குற்றப் புலனாய்வு பிரிவினர், அந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய இல. 18 ஏ,கெலன்கடுவ, கொழும்பு -06 இல் அமைந்துள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்தி அங்கிருந்து குறித்த சில ஆவணங்களும், 9 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய நாணய உறுதிப்பத்திரம் ஒன்றும் மீட்கப்பட்டதாக , குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று மன்றில் தெரிவித்தனர்.
குறித்த இடத்துக்கு இந்த ஆவணங்கள் எவ்வாறு வந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போது இலக்கம் 143, இசிபதன மாவத்தை, கொழும்பு 5 ஐ சேர்ந்த இம்ரான் மொஹமட் என்பவருக்கு, இலக்கம் 25 பீ, கலேவத்தை வீதி, கட்டுகஸ்தோட்டை பகுதியை சேர்ந்த மொஹமத் ஆரிப் என்பவரினால் இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
அதற்கமைய ஆவணங்கள் மீட்கப்பட்ட போது அது குறித்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் மொஹம்மட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும், அதன்போது மீட்கப்பட்ட ஆவணங்களிடையே இருந்த நாணய உறுதிப் பத்திரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் கூறினர்.
அந்த நாணய உறுதிப் பத்திரம் ஒன்பது கோடி ரூபாவையும் விட அதிக பெறுமதியானதென தெரிவித்த சி.ஐ.டி.,அந்த பத்திரம், பெண் ஒருவருக்கு தங்க நகைகளை கொள்வனவு செய்வதற்காக சந்தேகநபர் இம்ரான் மொஹம்மட்டால் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் கூறினர். அப்பத்திரம் ஆவணங்களின் படி 9 கோடி 35 இலட்சம் என்று உறுதியாகியுள்ள நிலையில், சந்தேக நபரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் தான் 9இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான நாணய உறுதிப் பத்திரங்களையே வழங்கியதாக அவர் கூறியதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கு தெரிவித்தனர்.
இந் நிலையில் சட்டதரணி ஒருவரின் முன்னலையில் இந்த நாணய உறுதிப் பத்திரம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை உறுதியான நிலையில் இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
குறித்த ஆவணங்கள் மீட்கப்பட்ட கொழும்பு 6 வீடு தொடர்பில் இடம்பெற்ற மேலதிக விசாரணைகளில் அது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமானது என்று தெரியவந்ததாக மன்றில் சுட்டிக்காட்டிய சி.ஐ.டி.யினர், ஆவணங்கள் அவ்வீட்டுக்கு எவ்வாறு எடுத்து வரப்பட்டன என்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக கூறினர்.
அதற்கமைய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர். இது தொடர்பில் விபரமான மேலதிக விசாரணை அறிக்கையையும் அவர்கள் மன்றில் சமர்ப்பித்தனர்.
இவ்விவகாரத்தின் போது, கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் மொஹம்மட் கறுப்புபண சுத்திகரிப்பு சட்டத்தின் 3(1) அ,ஆ சரத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரின் சகோதரர் ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவரிடம் சாட்சியாக கருதப்படும் நிலையில் சந்தேக நபருக்கு பிணை வழங்கினால் சாட்சிதாரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய நிலைமை இருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து சந்தேக நபர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டதரணி பிரதிவாதிக்கு பிணைவழங்குமாறு மன்றில் கேட்டுக்கொண்டப்போதும், நீதிவான் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
good
ReplyDeleteWell done President Gota