ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட, அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன
(இராஜதுரை ஹஷான்)
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தடையினை ஆளும் தரப்பினர் பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
சிறந்த அரசாங்கத்தை உருவாக்க தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவால் ஒருபோதும் குறிப்பிடமுடியாது. நல்லாட்சியின் நோக்கத்தை இவரே இல்லாதொழித்தார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை முழுமையாக தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்தில் குண்டுத்தாக்குதலின் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் மூன்று மாத காலத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை.
மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களையும் அரசியல் பிரசாரமாக்கினார்கள். தடயவியல் கணக்கறிக்கையில் கடந்த அரசாங்கத்தில் பங்குச்சந்தையில் அதிகளவில் மோசடி இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளமையினால் இன்று பிணைமுறியை அரசியல் பிரசாரமாக்க ஆளும் தரப்பினர் விரும்பவில்லை.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையினை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் திருத்திக் கொள்ள வேண்டும். பொது தேர்தலில் இதனை ஆளும் தரப்பினர் முழுமையாக தங்களின் அரசியல் தேவைகளுக்காக பிரசாரமாக்கிக் கொள்வார்கள்.
சிறந்த அரசாங்கத்தை கட்டியெழுப்ப முடியாமைக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரினாலேயே நல்லாட்சி அரசாங்கம் பலவீனமடைந்தது, தேவையற்ற விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டார். அதனை எதிர்த்தரப்பினர் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்கள்.
மிக் விமான கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவருக்கு பிணை வழங்கப்படும். ஆட்சி மாற்றத்தின் மாற்றங்களை மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் ரீதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வெகுவிரைவில் ஜனாதிபதி அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்படுவார். அவருடன் சஜித் பிரேமதாஸவினால் மாத்திரமே இணைந்து செயற்பட முடியும் என்றார்.
நீங்கள் எல்லாம் நிரைய கிழித்தீர்கள், இப்போதுதான் வந்தவனுகளை குறைகூறுகிறீர்கள், அவனுகளை வரவைத்ததே நீங்கள்தானே.
ReplyDelete