Header Ads



சிறிய வயதில் இருந்து தேர்தலில் போட்டியிட ஆசை, பதுளையில் போட்டியிடவுள்ள நடிகை

சிறிய வயதில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அந்த எதிர்பார்ப்பு இம்முறை நிறைவேறும் எனவும் பிரபல சிங்கள நடிகை ஓஷாடி ஹேவாமத்தும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக சமூகத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ஒஷாடி, திடீரென அரசியலுக்குள் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தான் 2010 ஆம் ஆண்டு முதல் மகிந்த ராஜபக்சவுடன் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த விமர்சனம் தனக்கு பொருந்தாது எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வியத்மக அமைப்பின் முதல் 10 உறுப்பினர்களில் நான் இருக்கின்றேன். அவர்களிடையில் கலைத்துறை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே நபர் நான்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் அமைப்பின் முதலாவது உறுப்பினர் நான். தேர்தலில் போட்டியிட தேவையான தகுதிக்கு மேலதிகமான தகுதி என்னிடம் இருக்கின்றது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான பின்னர் கலைத்துறையை விட மக்களின் பொது பிரச்சினைகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த உள்ளேன். குறிப்பாக சுதேச வைத்திய துறை சம்பந்தமாக அதிக கவனத்தை செலுத்த எண்ணியுள்ளேன்.

பதுளை மாவட்டத்தில் முதல் இடத்திற்கு வர எதிர்பார்க்கவில்லை. கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவேன். பதுளையில் 8 ஆசனங்களில் பொதுஜன பெரமுன 6 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் ஓஷாடி ஹேவாமத்தும குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.