மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி நேரடி விஜயம் - பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, ராஜகிரி லென் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றது.
புள்ளி விபரங்களின்படி காலி மாவட்டத்தில் மிகவும் வறிய கிராமமான உடுகம ஹோமாதொள கொத்தலாவலபுர கிராமம் ஜனாதிபதி அவர்களினால் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறு இடம்பெறும் மாவட்ட குழுக் கூட்டத்திற்காக செலவாகும் தொகையை மட்டுப்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை கிராமிய மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் மாவட்டத்தின் நகர, கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் இடர் முகாமைத்துவ திட்டங்கள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பல்வேறு துறைகளினூடாக கலந்துரையாடப்பட்டது. வறுமையை ஒழித்தல், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் சிறந்த கல்வி பின்புலத்தை உருவாக்குதல் மற்றும் விவசாய, மீன்பிடித்துறைகளில் துரித அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி அவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக செல்லும் வழியின் இரு பக்கத்திலும் ஒன்றுகூடியிருந்த மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். எண்ணெய்ப்பனை (பாம் ஒயில்) பயிரிடுவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் முறையிட்டனர். கலந்துரையாடலின் முதலாவது பிரச்சினையாக இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டது. பிரதேசத்தில் எழுந்துள்ள நீர் பற்றாக்குறைக்கு எண்ணெய்ப்பனை பயிரிடுதல் பெரும் பாதிப்பை செலுத்தியுள்ளது. இது தொடர்பாக முறையான சுற்றாடல் ஆய்வொன்றை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். இதன்மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. எனினும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுமானால் இலாபத்தின் மூலம் பயன் இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், உடனடியாக எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும். அதன் பெறுபேறாக தென்னைப் பயிர்ச் செய்கையும் அபிவிருத்தி அடையும். இறப்பருடன் தொடர்புடைய பல்வேறு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் அவ்வுற்பத்திகளுக்கு தேவையான இறப்பர் போதுமானளவு கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இறப்பர் செய்கையை ஒரு விவசாய நடவடிக்கையாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார். அதனை ஊக்குவிப்பதற்காக இறப்பர் இறக்குமதியை உடனடியாக நிறுத்துவது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.
காலி மாவட்டத்தில் கிராமிய பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை குறித்து பிரதேச அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். உடனடியாக அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கணிதம், விஞ்ஞானம் பாடங்களையும் போதிப்பதற்கு தேவையான ஆசிரியர்களையும் முறைமைகளையும் முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். மஹிந்தோதய தொழிநுட்ப கூடங்களை உருவாக்கும் நோக்கத்தினை நடைமுறைப்படுத்தி புதிய தொழிநுட்பத்தின் மூலம் தற்காலத்திற்கேற்ற வகையில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை போதிப்பதற்கான பின்புலத்தை உருவாக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நெலுவ, நாகொடை, உடுகம உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் எழுந்துள்ள குடி நீர்ப் பிரச்சினை குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள குறைபாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
முன்னெடுக்கப்பட்டுள்ள பிரஜா மற்றும் ஏனைய குடிநீர் திட்டங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்கி குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஒப்பந்தக்காரர்கள் உரிய முறையில் பணிகளை நிறைவு செய்யவில்லையானால் அவர்களை உடனடியாக நீக்குமாறும் குறிப்பிட்டார்.
திண்மக் கழிவு முகாமைத்துவ பிரச்சினைக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பிரதேச மட்டத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தி கழிவகற்றல் திட்டங்களுக்கு உதவுமாறும் ஜனாதிபதி அவர்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
கிராமிய மருத்துவ நிலையங்களை முறையாக செயற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதிகளை போதுமானளவில் அவற்றுக்கு வழங்கி மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன், இதன்மூலம் கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சன நெரிசலை பெருமளவு குறைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
காலி மாவட்டத்தில் கிராமிய வீதிகள், பாலங்களை நிர்மாணித்தல், வெள்ளத்தை கட்டுப்படுத்தல், நகர அபிவிருத்தியின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் சுற்றுலாத்துறையில் காலி மாவட்டம் முக்கிய இடம் வகிக்கின்றது. ஹிக்கடுவை கரையோரப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிரதேசத்தின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். உணவட்டுனவை அண்மித்ததாக சுற்றுலா பொலிஸ் நிலையமொன்றை உடனடியாக நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. மீன்பிடிக் கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தை அண்டிய பிரச்சினைகளை இனங்கண்டு குறித்த அமைச்சுகளுக்கு பொறுப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இனங்காணப்பட்டுள்ள மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார்.
இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு அச்சந்தர்ப்பத்திலேயே தீர்வுகள் வழங்கப்பட்டன. உடுகம வைத்தியசாலைக்கு தண்ணீர் பவுசர் ஒன்றை வழங்குதல், அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல், சிறியளவிலான நீர்வழங்கல் திட்டங்களுக்கான நிலுவை பணங்களை வழங்குதல் ஆகியன இவற்றில் உள்ளடங்கும்.
காலி மாவட்ட தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் மாவட்ட குழுக்கூட்ட தொடருடன் இணைந்ததாக சுற்றாடல் அழிவுகளை குறைக்கும் நோக்குடன் மரக்கன்றுகளை நடும் திட்டமும் ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப நடைமுறைப்படுத்தப்பட்டது. காலி மாவட்டத்தில் 300 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சித்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அவர்கள் விகாரை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார்.
கூட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி அவர்களை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.02.27
Post a Comment