மைத்திரிபாலவுடன் ஒரே மேடையில் ஏறுவது தற்கொலைக்கு ஈடானது
முன்னாள்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் எந்த வகையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என அந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சியின் தலைமையிடம் கேட்டுள்ளதுடன் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் ஏறுவது என்பது தற்கொலை செய்துக்கொள்வதற்கு ஈடானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மக்கள் நிலைப்பாடுகள் கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்ட போதிலும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதலுக்கு முன்னர் அது குறித்த எச்சரிக்கையை முற்றாக அறிந்து இருந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகவும் பாரதூரமானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியிட உள்ள தகவல்களால் நிலைமை மேலும் உக்கிரமடையும்.
இதனால், ஏப்ரல் 25 ஆம் திகதி அளவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே பட்டியலில் போட்டியிட்டால், பொதுஜன பெரமுனவினால், ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறக்க முடியாது என்பது மாத்திரமல்ல, தாக்குதலுக்கான பொறுப்பை கூட பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.
இவ்வாறான நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் மைத்திரிபால சிறிசேன போட்டியிட இடமளிக்க முடியாது என்பதை தற்போதே அறிவிக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தலைமையிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment