கல்வியமைச்சராக பதியுதீனும், சபாநாயகராக பாக்கீர் மாக்கார் இருந்ததை யாரும் எதிர்க்கவில்லை
(எம்.ஆர்.எம்.வஸீம்)
அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்ட பாராளுமன்றம் ஒன்றை உருவாக்குவதே எமது நோக்கம். அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம் என ராஜாங்க அமைச்சரும் அரசாங்க இணை ஊடகப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று -27- பிரதமர் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.
அவ்வாறு இடம்பெற்றால் பாராளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என நம்புகின்றோம். தேர்தலுக்கு பின்னர் அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கிய, நாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.
ஏனெனில் கடந்த 25வருடங்களாக நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் அடிப்படைவாதிகளுக்கு முன்னால் தலைகுனிந்தன. பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட ஆசனங்களை வைத்துக்கொண்டு, ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி அவர்களின் அடிப்படைவாதத்தை அதிகரித்துக்கொண்டனர். அவ்வாறான அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்.
அத்துடன் சிறிமா பண்டாரநாயக்கவின் காலத்தில் கல்வி அமைச்சராக பதியுதீன் மொஹமத் இருந்தார். அதபோன்று பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்தார்.
யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கதிர்காமரை பிரதமாரக்கவேண்டும் என இந்த நாட்டு மக்கள் தெரிவித்தனர். அப்போது நாட்டில் இனவாதம் இருக்கவில்லை. அதனால் தேசிய வாதத்தையும் இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை குழுப்பிக்கொள்ளக்கூடாது.
ஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் பாராளுமன்றம் முற்றாக அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்துக்கு கீழ் இருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு கீழ்படியவேண்டிய நிலையே இருந்தது.
உதாரணமாக உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அனுமதித்துக்கொள்ளும்போது சிலர் வாக்களிக்க மறுத்து சென்று விட்டனர்.
இறுதியில் அந்த அடிப்படைவாதிகளை வரவழைத்து, அவர்களுக்கு தேவையான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுத்தே அந்த சட்ட மூலத்தை அனுமதித்துக்கொள்ள முடியுமாகியது. அந்த நிலைமைக்கு பாராளுமன்றம் சென்றுவிடாமல் பாதுகாக்க எதிர்வரும் தேர்தலில் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகின்றன. நூறு நாட்களில் எமது கொள்கையின் பிரகாரம் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அடித்தளத்தை அமைத்திருக்கின்றோம்.
குறிப்பாக பாடசாலை கட்டமைப்பை கட்டியெப்ப நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நாட்டில் இருக்கும் 372 தேசிய பாடசாலைகளில் 280 பாடசாலைகளில் கடந்த 5வருடங்களாக நிரந்த அதிபர்கள் இல்லாமல் இருந்திருக்கின்றன.
இந்த பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க தற்போது நேர்முகப்பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அத்துடன் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டமும் இடம்பெற்றுவருகின்றது.
மேலும் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒருஇலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதேபோன்று 54ஆயிரம் பட்டதாரிகள் தொழில் இல்லாமல் இருக்கின்றனர்.
அவர்கள் அனைவரையும் அரசாங்க தொழிலில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. தேர்தலுக்கு முன்னர் இவ்வனைத்து வேலைத்திட்டங்களுக்குமான அடித்தளத்தை பூர்த்திசெய்வோம் என்றார்.
Post a Comment