முக்கிய கட்டத்தை எட்டிய கொரோனா, கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம்
COVID-19 கிருமிப்பரவல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதுடன் அது கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என்று எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் COVID-19 கிருமிப் பரவலுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
உலக நாடுகள் COVID-19 கிருமித்தொற்று கொள்ளை நோயை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்று உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 38.
மகளிர், குடும்ப விவகார அமைப்பின் துணைத் தலைவர் உட்பட, ஈரானின் உயர் அதிகாரிகள் சிலருக்கு COVID-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகின் மற்ற பாகங்களிலும் கவலைக்குரிய நிலை தொடர்வதாக டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
Post a Comment