Header Ads



வரலாறு காணாத மாபெரும் வெற்றியை, பொதுஜன முன்னணி பெறும், பஸில்

"நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மாபெரும் வெற்றிபெற்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி கூட்டணியின் பிரதான இலக்காகும்."

- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் செயலாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

புதிய கூட்டணி தொடர்பில் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"சிங்களக் கட்சிகள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் எமது புதிய கூட்டணியில் இணைத்து வருகின்றோம். இதுவரை மொத்தமாக 14 கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் பல கட்சிகளை இணைக்கவுள்ளோம்.

இலங்கை அரசியல் வராலாற்றில் வலுமைமிக்க - பலமிக்க கூட்டணியாக எமது கூட்டணி செயற்படும்.

'தாமரை மொட்டு' சின்னத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். சின்னம் தொடர்பில் இறுதி முடிவு எடுத்துவிட்டோம். எனவே, எக்காரணம் கொண்டும் சின்னத்தை மாற்றவே மாட்டோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை நிறுவ ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சிக்குத் கிடைத்த அமோக வெற்றியினால் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியை சுலபமாக நிறுவியுள்ளோம்.

எமது கூட்டணி நாட்டு மக்களின் பேராதரவுடன் வரலாறு காணாத மாபெரும் வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" - என்றார்.

No comments

Powered by Blogger.